பிராக்: செக் குடியரசின் தலைநகர் பிராகில் 'வென்செஸ்லஸ்' சதுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செக் குடியரசில் எழுந்துள்ள எரிசக்தி நெருக்கடியைத் தொடர்ந்து அந்நாட்டு அரசாங்கம் பதவிவிலகவேண்டும் என்பது ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கை.
ஐரோப்பாவில் குளிர்காலம் நெருங்குவதை முன்னிட்டு பொருள்களின் விலை, எரிசக்திக்கான செலவு ஆகியவை அதிகரித்து வருவதால் செக் குடியரசில் அதிருப்தி நிலவுகிறது.
உக்ரேன் போர் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீது பல கடுமையான தடை உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதுதான் ஐரோப்பிய நாடுகள் சந்தித்துவரும் பொருளியல் ரீதியான பிரச்சினைகளுக்குக் காரணம் என்பது பல ஆர்ப்பாட்டக்காரர்களின் வாதம்.
எனினும், ரஷ்யாவுக்கு எதிரான தடை உத்தரவுகள் அதற்குக் காரணமல்ல என்று ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கூறி வருகின்றனர். இயற்கை எரிவாயு ஏற்றுமதியைப் பயன்படுத்தி ரஷ்யா மிரட்டல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதே காரணம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
இந்த விவகாரத்தின் தொடர்பில் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டத்தை எதிர்நோக்கும் முதல் ஐரோப்பிய நாடுகளில் செக் குடியரசு ஒன்று. இதர ஐரோப்பிய நாடுகளும் நிலைமையைக் கூர்ந்து கவனிக்கும்.

