உலகக் கிண்ணப் போட்டியை நேரில் காண தடுப்பூசி தேவையில்லை
டோஹா: இவ்வாண்டு கத்தாரில் அரங்கேறவுள்ள உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை நேரில் சென்று காண விரும்புவோர் கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொண்டிருக்கத் தேவையில்லை என்று அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு மில்லியனுக்கும் அதிகமான காற்பந்து ரசிகர்கள் போட்டியைக் காண கத்தார் செல்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கத்தார் செல்ல விமானத்தில் ஏறுவதற்கு முன்பு பயணிகள் தங்களுக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்படாததை உறுதிசெய்யும் பரிசோதனை முடிவுகளை சமர்ப்பிக்கவேண்டும்.
கத்தாரில் பொதுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்தும்போது முகக்கவசம் அணிவது கட்டாயம்.
முன்னணி லீக்குகளில் 20% கூடுதல் காயங்கள்
லண்டன்: ஐரோப்பாவின் ஆகச் சிறந்ததாகக் கருதப்படும் ஐந்து காற்பந்து லீக்குகளில் 2021-22 பருவத்தில் விளையாட்டாளர்கள் காயமடைவது 20 விழுக்காடு கூடியுள்ளது. இங்கிலிஷ் பிரிமியர் லீக், ஸ்பெயினின் லா லீகா, ஜெர்மனியின் பண்டஸ்லீகா உள்ளிட்டவை அந்த லீக்குகளில் அடங்கும். நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வின் முடிவுகளில் இந்த விவரம் தெரியவந்தது.
காயமுற்ற விளையாட்டாளர்களுக்கு சிகிச்சை அளிக்க ஐரோப்பிய குழுக்கள் வரலாறு காணாத அளவில்
513 மில்லியன் பவுண்ட் (800 மில்லியன் வெள்ளி) தொகையைச் செலவழித்ததாக 'ஹெளடன்' எனும் காப்புறுதி நிறுவனம் நடத்திய அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. முக்கிய ஐரோப்பிய காற்பந்து லீக்குகளில் விளையாட்டாளர்களுக்குப் போதுமான ஓய்வு வழங்கப்படவேண்டும் என்பது குறித்து குரல் எழுப்பப்பட்டு வருவதைத் தொடர்ந்து இந்நிலை உருவெடுத்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தான் முன்னணி
லாகூர்: இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் 3-2 எனும் ஆட்டக்கணக்கில் முன்னணி வகிக்கிறது பாகிஸ்தான் (படம்). லாகூரில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆறு ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி கண்டது. பாகிஸ்தான் 145 ஓட்டங்களை எடுத்திருந்தது. ஆட்டத்தில் வெல்வதற்கு 146 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்டபோதும் இங்கிலாந்து 139 ஓட்டங்களையே எடுத்தது.

