ஓக்லாந்து (அமெரிக்கா): அமெரிக்காவின் ஓக்லாந்து நகரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் அறுவர் காயமடைந்துள்ளனர்.
உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய காயங்களுக்கு ஆளான இரண்டு பெரியவர்களும் அவர்களில் அடங்குவர். அவ்விருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
லேசான காயங்கள் ஏற்பட்ட இதர நால்வர் உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.
சம்பவம் நிகழ்ந்த 'ஈஸ்ட் ஓக்லாந்து' பள்ளி வளாகத்தில் குறைந்தது மூன்று பள்ளிகள் இருக்கின்றன. காயமடைந்த அனைவரும் 18 வயதைத் தாண்டியவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. ஓக்லாந்தில் கடந்த ஒன்பது நாள்களில் குறைந்தது எட்டு பேர் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களுக்குப் பலியானதாக அதிகாரிகள் கூறினர்.

