ஹனோய்: கம்போடியாவில் படகு விபத்து நிகழ்ந்து சுமார் ஒரு வாரத்திற்குப் பிறகு ஏழு பேரின் உடல்கள் வியட்னாமில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தென் வியட்னாமில் உள்ள கடற்கரைக்கு உடல்கள் தள்ளப்பட்டிருக்கின்றன.
வியட்னாமின் ஃபு குவோக் தீவின் கடற்கரை ஒன்றில் அந்த ஏழு உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அவை மூழ்கிய படகுடன் தொடர்புடையவர்களின் உடல்கள் எனச் சந்தேகிக்கப்படுவதாக அந்நாட்டின் பொதுப் பாதுகாப்பு அமைச்சு கூறியது.
கம்போடியாவின் கடற்கரை நகரான சிஹானுக்வில்லில் விபத்து நேர்ந்தது. படகில் 40க்கும் அதிகமானோர் இருந்தனர். கம்போடியா, வியட்னாம் இரு நாடுகளையும் சேர்ந்த அதிகாரிகள் 30 பேரை உயிருடன் மீட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
விபத்துக்குப் பிறகு ஆள் கடத்தல் வழக்கு தொடரப்பட்டது; அறுவர் கைது செய்யப்பட்டனர்.

