சோல்: இன்று முதல் தென்கொரியா செல்வோர் பயணம் மேற்கொள்வதற்கு முன்பு 'பிசிஆர்' பரிசோதனையை மேற்கொள்ளத் தேவையில்லை. அந்நாட்டின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் நேற்று இதைத் தெரிவித்தது.
முன்னதாக தென்கொரியாவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு முன்பு 24 மணிநேரத்திற்குள் பயணிகள் 'பிசிஆர்' பரிசோதனை மேற்கொள்வது கட்டாயமாக இருந்தது. இப்போது அந்நாட்டில் அனைத்து பயணக் கட்டுப்பாடுகளும் விலக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, ஆஸ்திரேலியாவில் இம்மாதம் 14ஆம் தேதி முதல் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளானோர் ஐந்து நாள்களுக்குத் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை என்று அந்நாட்டுப் பிரதமர் ஆன்டனி அல்பனீஸ் தெரிவித்துள்ளார். எனினும், அச்செயல் பொதுமக்களின் சுகாதாரத்திற்கு ஆபத்து விளைவிக்கும் ஒன்றாக அமையலாம் என்று ஆஸ்திரேலிய மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக பல உலக நாடுகள் பல கிருமிப் பரவல் கட்டுப்பாடுகளைப் பெரிய அளவில் தளர்த்தி வருகின்றன.

