இந்தோனீசியாவில் காற்பந்து ஆட்டத்தில் ஏற்பட்ட கலவரம்: 32 சிறுவர்கள் இறந்தனர்

இந்தோனீசியாவில் காற்பந்து ஆட்டத்தில் ஏற்பட்ட கலவரம்: 32 சிறுவர்கள் இறந்தனர்

2 mins read
155d8857-9413-4e01-8397-e29388270bca
மாண்டவர்களுக்காக மத்திய ஜாவாவில் உள்ள செமாராங்கில் உள்ள விளையாட்டரங்கத்தில், அஞ்சலி செலுத்தப்பட்டது. படம்: ராய்ட்டர்ஸ் -
Google News Preferred Icon

இந்தோனீசியாவில் நேற்றுமுன்தினம் நடந்த கலவரத்தில் மாண்ட 125 பேரில் 32 பேர் சிறுவர்கள் என்று அரசாங்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மூன்று வயது முதல் 17 வயது வரையிலான சிறுவர்கள் இறந்துவிட்டதாக இந்தோனீசியாவின் மகளிர் தன்னதிகார, சிறுவர் பாதுகாப்பு அமைச்சு அதிகாரி ஒருவர் கூறினார்.

முதல்முறையாக காற்பந்தாட்டத்தை நேரில் பார்க்கச் சென்ற தம்பிகள் தள்ளுமுள்ளில் சிக்கி இறந்ததாகக் கூறிய அக்காள், பெற்றோர் மாண்டதைப் பார்த்ததாகக் கூறிய பிள்ளைகள் என பல கண்ணீர்க் கதைகள் வெளிவந்துள்ளன.

பல்லாயிரம் பேர் கூடியிருந்த காற்பந்து விளையாட்டரங்கத்தில் காற்பந்து ஆட்டம் முடிவடைந்த பின்னர் கலவரம் ஏற்பட்டது.

இந்தோனீசியாவின் உள்நாட்டுக் காற்பந்து லீக் ஆட்டம் ஒன்று நடைபெற்றபோது, தோற்ற அணியின் ஆதரவாளர்கள் திடலுக்கு ஓடி வந்துவிட்டனர்.

அவர்களைக் கலைக்க காவல்துறை கண்ணீர் புகையைப் பயன்படுத்தியது.

அதிகபட்சம் 38,000 பேர் இருக்கக்கூடிய அரங்கத்தில் 42,000 பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்தோனீசியா அந்தக் கலவரத்தை விசாரிக்க தன்னிச்சையான விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

குறிப்பாக காவல்துறை ஏன் அந்நேரத்தில் கண்ணீர் புகையைப் பயன்படுத்தியது என்று இந்தோனீசிய மனித உரிமைகள் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

உலகளவில் விளையாட்டு அரங்கங்களில் ஏற்பட்டுள்ள ஆக மோசமான பேரிடர்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.

காற்பந்து ஆட்டங்களின்போது கைத்துப்பாக்கிகளோ கூட்டத்தைக் கலைக்கும் புகையோ பயன்படுத்தக்கூடாது என்பது தனது விதிமுறைகளின் ஒன்று என ஃபிஃபா கூறியது.

இந்தோனீசிய அரசாங்கம் மாண்டவர்களின் குடும்பங்களுக்கு 50 மில்லியன் ரூப்பியா (3,268 அமெரிக்க டாலர்) இழப்பீட்டை அறிவித்துள்ளது.