மீண்டும் லங்காவி தொகுதியில்
போட்டியிடவுள்ள மகாதீர்
புத்ரஜெயா: முன்னாள் மலேசியப் பிரதமரான மகாதீர் முகம்மது மீண்டும் லங்காவி தொகுதியில் போட்டியிடப் போவதாகத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை லங்காவியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவர் அப்பகுதியைத் தக்கவைத்துக்கொள்ளும் எண்ணம் கொண்டுள்ளார்.
தமது கட்சியான பெஜுவாங், அதன் பிரதமர் வேட்பாளரை இன்னும் தேர்ந்தெடுக்கவில்லை என்று
97 வயது டாக்டர் மகாதீர் கூறினார். சென்ற பொதுத் தேர்தலில் ஆளும் அம்னோ கட்சியை ஆட்சியிலிருந்து கவிழ்ப்பதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார்.
இதற்கிடையே, அம்னோ பொதுத் தேர்தலை வென்றால் 1எம்டிபி ஊழல் வழக்குகளில் இதுவரை ஒன்றில் குற்றம் நிரூபிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சிறையிலிருந்து விடுவிக்கப்படக்கூடும் என்று டாக்டர் மகாதீர் கூறியுள்ளார். திரு நஜிப், தமக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டு சிறைத் தண்டனையை நிறைவேற்றி வருகிறார்.
பணவீக்கம்: குறை உள்ள காய்கறி,
பழங்களை வாங்கும் பிரிட்டிஷ் மக்கள்
லண்டன்: பிரிட்டனில் கடந்த சுமார் 14 ஆண்டுகளில் இல்லாத அளவு விலைகள் அதிகரித்துள்ளன. நெருக்கடியைச் சமாளிக்க அங்கு பலர் குறைகள் உள்ள காய்கறிகளையும் பழங்களையும் வாங்கும் நிலை அந்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
பிரிட்டனில் குறைகள் இருப்பதைத் தெரிவித்தே காய்கறிகளும் பழங்களும் விற்கப்படுவதுண்டு. மாதாந்திர அடிப்படையில் அவற்றின் விற்பனை 38 விழுக்காடு அதிகரித்ததாக புள்ளி விவரங்களைக் கணக்கிடும் 'கன்டார்' நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்தது.
பிரிட்டனில் மளிகைப் பொருள்களுக்கான பணவீக்க விகிதம் 13.9 விழுக்காடாகப் பதிவாகியுள்ளது. அந்நாட்டில் 2008க்குப் பிறகு இவ்வாண்டுதான் அந்த விகிதம் இவ்வளவு அதிகமாகப் பதிவாகியுள்ளது.

