இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் அபாரமாக விளையாடும் குழு என்றால் அது மான்செஸ்டர் சிட்டிதான். எனினும், இதுவரை பலரைக் கவர்ந்திருக்கும் குழு, பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை வகிக்கும் ஆர்சனலே.
அச்சுறுத்தும் வகையில் சிட்டியும் அதன் நட்சத்திரம் எர்லிங் ஹாலண்டும் விளையாடினாலும் தனது இலக்கில் குறியாக இருக்கிறது ஆர்சனல். லீக்கில் இதுவரை லிவர்பூல், டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் ஆகிய இரண்டு குழுக்களையும் வென்று தாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர் என்பதைக் காண்பித்துள்ளனர் ஆர்சனல் வீரர்கள்.
லீக்கில் இதுவரை ஒன்பது ஆட்டங்களில் மட்டுமே ஆர்சனல் விளையாடியிருந்தாலும் இந்தக் கட்டத்தில்கூட இவ்வளவு சிறப்பாகச் செய்யும் என்பது பலர் எதிர்பாராத ஒன்று. அதிகம் யோசிக்காமல் ஒவ்வோர் ஆட்டத்திலும் வெல்வது எப்படி என்பதை மட்டும் கருத்தில்கொண்டு அசத்தி வந்துள்ளது ஆர்சனல்.
ஞாயிற்றுக்கிழமையன்று ஆர்சனலிடம் தோல்வியடைந்த லிவர்பூல், எதிர்பாரா சவால்களைச் சந்திக்கிறது.
சிட்டிக்குப் போட்டி தரக்கூடிய ஒரே குழு என்ற பெயரைப் பெற்ற லிவர்பூல் இந்தப் பருவத்தின் ஆட்டங்களில் வெற்றிகாணவே சிரமப்படுகிறது. இப்பருவத்தில் லிவர்பூல் லீக் பட்டத்திற்குப் போட்டி தராது என்று அதன் நிர்வாகி யர்கன் கிளாப் கூறிவிட்டார். இப்போதைக்கு அதை உறுதியாகச் சொல்லிவிடமுடியாது. அடுத்த வாரம் லிவர்பூலும் சிட்டியும் மோதுகின்றன.
குறிப்பாக ஹாலண்டின் கோல்களால் கொடிகட்டிப் பறக்கிறது சிட்டி. அனைத்துவகைப் போட்டிகளிலும் இப்போதே 20 கோல்களைப் போட்டுவிட்டார் ஹாலண்ட். இன்னும் அக்டோபர் மாதம்கூட நிறைவடையவில்லை.
லீக்கில் சிட்டியைச் சந்திக்கும்போது அந்த ஆட்டத்தில் வெல்வதுதான் ஆர்சனலுக்கான சவால்.பட்டியலில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தை வகிக்கிறது சிட்டி.
ஹாலண்டைப் பற்றியே அதிகம் பேசப்படும் வேளையில் தனது சாதனைகளை நினைவூட்டினார் மான்செஸ்டர் யுனைடெட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ. ஒரு வழியாக ரொனால்டோ இந்த லீக் பருவத்தில் தனது முதல் கோலைப் போட்டுவிட்டார்.
முந்தைய ஆட்டத்தில் சிட்டியிடம் 6-3 எனும் கோல் கணக்கில் உதை வாங்கிய யுனைடெட் கடந்த வாரம் எவர்ட்டனை வென்றது. அந்த ஆட்டத்தில் வெற்றி கோலைப் போட்டவர் ரொனால்டோ.
இது, தொழில்முறைக் காற்பந்தில் ரொனால்டோவின் 700வது கோல்.
எவர்ட்டனுக்கு எதிராக யுனைடெட் சிறப்பாக ஆடியது எனக் கூறமுடியாது. வெற்றி பெறுவதற்குத் தேவையன விளையாட்டு அதனிடம் இருந்தது, அவ்வளவுதான்.
தொடர்ந்து ஆட்டங்களில் வென்று தனது விளையாட்டை மேம்படுத்திக்கொண்டே இருந்தால்தான் யுனைடெட் மீண்டும் லீக் கிண்ணத்திற்குப் போட்டி தரும் நிலை வரும். அதற்கு ஓரிரு ஆண்டுகள்கூட ஆகலாம்.
சென்ற வாரம் சற்று தடுமாறிய டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் சிறப்பாக விளையாடிவந்த பிரைட்டனை வென்று தான் இன்னும் களைத்துப் போகவில்லை என்பதைத் தெரியப்படுத்திக்கொண்டது. ஸ்பர்ஸ் நிர்வாகி அன்டோனியோ கோன்டே தனது குழுக்களை எப்படியாவது வெல்லவைக்கும் சூத்திரம் தெரிந்தவர். சிட்டி போன்ற அபாரமான குழுக்களையும் கையாளக்கூடியவர்.
பட்டியலில் மூன்றாம் இடத்தை வகிக்கிறது ஸ்பர்ஸ்.
புதிய நிர்வாகி கிரஹாம் போட்டருக்குக்கீழ் படிப்படியாக முன்னேறும் அறிகுறிகள் செல்சியிடம் தென்படுகின்றன. தொடர்ந்து இரண்டு லீக் ஆட்டங்களில் செல்சி வென்றுள்ளது இதற்குச் சான்று.
எனினும், தற்போதைய காற்பந்து உலகில் ஓர் ஆட்டத்தில் தடுமாறினாலும் விமர்சனம் கடுமையாகும். அதைத் தவிர்க்கும் பொறுப்பு போட்டருக்கு உள்ளது.
ஆறாம் இடத்தை வகிக்கும் நியூகாசல் யுனைடெட் லீக் பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் முடிக்கக்கூடும் என்ற உணர்வு மீண்டும் எழத் தொடங்கியுள்ளது.
கடந்த இரு ஆட்டங்களில் வென்றது மட்டுமின்றி நியூகாசலின் விளையாட்டு கவரும்படியாகவும் உள்ளது. குழுவை மேம்படுத்த அதன் சவூதி அரேபிய உரிமையாளர்கள் அதிகம் செலவு செய்ததற்குப் பலன் தெரிகிறது.
நியூகாசலின் முயற்சிகள் கனிந்தால் அது நடுநிலை ரசிகர்களுக்கு உற்சாகத்தைத் தரும்.
அடுத்த லீக் ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட்டும் நியூகாசலும் மோதுகின்றன.
இந்த பிரிமியர் லீக் காற்பந்துப் பருவம் கிட்டத்தட்ட கால் கட்டத்தைத் தொட்டுவிட்டது. இன்னமும் உறுதியாக எதையும் சொல்லமுடியாது; ஆனால், குழுக்களின் போக்கை ஓரளவு கணிக்கமுடியும்.
புதன்கிழமை களநிலைமை
இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுக்களின் நிலையை அலசும் பகுதி

