இந்தோனீசியாவின் பாலித் தீவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் இருபதாம் ஆண்டு நிறைவு இன்று அனுசரிக்கப்பட்டது. வெடிப்பில் மாண்டவர்களின் உறவினர்களும் உயிர்பிழைத்தவர்களும் இதில் கலந்துகொண்டனர்.
குண்டுவெடிப்பில் 200க்கும் மேற்பட்டோர் மாண்டனர்.
பாலியின் புகழ்பெற்ற குட்டா வட்டாரத்தில் பலர் ஒன்றுகூடி இந்நினைவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
2002 அக்டோபர் 12 அன்று அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய குழு ஒன்று குட்டா பகுதியில் தாக்குதலை மேற்கொண்டது. தென்கிழக்காசியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆக மோசமான பயங்கரவாத செயலாக இது கருதப்படுகிறது.
தாக்குதலில் மாண்டவர்கள் சுமார் 20க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள். 88 ஆஸ்திரேலியர்கள், 38 இந்தோனீசியர்கள், 20க்கும் அதிகமான பிரிட்டிஷ் மக்கள் தாக்குதலில் உயிரிழந்தனர்.
தாக்குதலை மேற்கொண்டவர்கள் காவல்துறையால் கொல்லப்பட்டனர் அல்லது அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளைத் தயாரித்த உமர் பாட்டக் என்பவரின் தண்டனைக் காலத்தைக் குறைக்க இந்தோனீசியா அரசாங்கம் பரிசீலித்துவருகிறது. அவருக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறைத் தண்டனையில் பாதியை மட்டும் அவர் நிறைவேற்றியுள்ளார்.


