வாஷிங்டன்: கூடுதல் எண்ணெய்யை உற்பத்தி செய்யுமாறு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கேட்டுக்கொண்டதையும் மீறி உற்பத்தியைக் குறைத்துக்கொள்ளப்போவதாக 'ஓபெக்' எனும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான உறவில் பின்விளைவுகள் ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
ஆயுத விற்பனை உட்பட எல்லா வகையிலும் சவூதி அரேபியாவுடன் ஒத்துழைப்பதை அமெரிக்கா உடனடியாக நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று ஜனநாயகக் கட்சியின் செனட்டரும் அமெரிக்க செனட் சபையின் வெளியுறவுக் குழுத் தலைவருமான பாப் மெனெண்டெஸ் கூறியிருந்தார். அதையடுத்து திரு பைடன் இவ்வாறு சொன்னார்.
'சிஎன்என்' ஒளிவழி நடத்திய நேர்காணலில் எத்தகைய அம்சங்களில் ஒத்துழைப்பை நிறுத்துவது என்பது குறித்து திரு பைடன் பேச மறுத்துவிட்டார்.

