மான்செஸ்டர் சிட்டி தடுமாற்றம்
கோப்பன்ஹேகன்: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காற்பந்து ஆட்டத்தில் நட்சத்திரப் பட்டாளத்தைக் கொண்ட இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் மான்செஸ்டர் சிட்டி (படம்) குழு எதிர்பாரா விதமாக டென்மார்க்கின் எஃப்சி கோப்பன்ஹேகன் குழுவை வெல்லத் தவறியுள்ளது.
இந்த 'ஜி' பிரிவு ஆட்டம் கோலின்றி சமநிலையில் முடிந்தது. எனினும், சிட்டி இரண்டாம் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளது. இதர குழுக்கள் பொறாமைப்படும் வகையில் 'ஜி' பிரிவில் சிட்டி எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்களில் பல வீரர்களுக்கு ஓய்வு தரலாம்.
மண்ணைக் கவ்விய யுவென்டஸ், செல்சிக்கு சிறப்பான வெற்றி
ஹைஃபா (இஸ்ரேல்): ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் 'ஹெச்' பிரிவு ஆட்டத்தில் இத்தாலியின் யுவென்டஸ் குழுவை வென்று பலரை ஆச்சரியப்படுத்தியது இஸ்ரேலின் மக்காபி ஹைஃபா குழு.
இந்தத் தோல்வியைத் தொடர்ந்து போட்டியிலிருந்து வெளியேறும் விளிம்பில் உள்ளது பெரிதும் சிரமப்பட்டுவரும் யுவென்டஸ். சுமார் ஈராண்டுகளுக்கு முன்புகூட கொடிகட்டிப் பறந்த அது இப்போது இத்தாலிய லீக்கிலும் பெரிய அளவில் பின்தங்கியுள்ளது.
'இ' பிரிவில் இத்தாலியின் மற்றொரு குழுவான ஏசி மிலானை 2-0 எனும் கோல் கணக்கில் வென்றது இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவான செல்சி. செல்சியின் புதிய நிர்வாகி கிரஹாம் போட்டர் இதுவரை தனது பணியைக் கச்சிதமாக செய்து வந்துள்ளார்.
கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வென்றது இந்தியா
புதுடெல்லி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரின் கடைசி ஆட்டத்தில் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. இதன் மூலம் இந்தியா தொடரை 2-1 எனும் ஆட்டக்கணக்கில் கைப்பற்றியது.
தொடரின் கடைசி ஆட்டத்தில் முதலில் பந்தடித்த தென்னாப்பிரிக்கா 27.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. 19.1 ஓவர்களில் வெற்றி பெறுவதற்குத் தேவையான 100 ஓட்டங்களை எடுத்து ஆட்டத்தையும் தொடரையும் வென்றது இந்தியா.

