பேங்காக்: தாய்லாந்து அதன் துப்பாக்கி, போதைப்பொருள் சட்டங்களைக் கடுமையாக்கப்போவதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
சென்ற வாரம் தாய்லாந்தின் பாலர் பள்ளி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 24 சிறுவர்கள் உட்பட 36 பேர் மாண்டனர். அதுவே அந்நாட்டில் நிகழ்ந்துள்ள ஆக மோசமான தாக்குதல். அதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
நா கிலாங் மாநிலத்தில் முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் அத்துமீறி பாலர் பள்ளிக்குள் நுழைந்து தாக்குதலை நடத்தினார். ஒரு கத்தி, சட்டபூர்வமாக வாங்கப்பட்ட துப்பாக்கி ஆகியவற்றைக் கொண்டு அவர் தாக்குதலை மேற்கொண்டார்.
அச்சம்பவத்தையடுத்து இனி துப்பாக்கி வாங்கத் தகுதிபெறுவதற்கான நிபந்தனைகள் கடுமையாக்கப்படும் என்றும் ஏற்கெனவே துப்பாக்கி வைத்திருப்போருக்கான சோதனைகள் கடுமையாக்கப்படும் என்றும் தாய்லாந்தின் உள்துறை அமைச்சர் அனுப்போங் பாவ்ஜிண்டா தெரிவித்தார். மேலும், துப்பாக்கி வைத்துக்கொள்ள எண்ணும் அதிகாரிகள் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகாததையும் அதிக கோபத்துக்கு ஆளாகாமல் இருப்பதையும் அவர்களை நிர்வகிப்போர் உறுதிப்படுத்தவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தாய்லாந்தில் தற்போது துப்பாக்கி இயங்கும் வரை உரிமையாளர்கள் அதற்கான உரிமத்திற்கு மீண்டும் விண்ணப்பம் செய்யத் தேவையில்லை. இனி அவர்கள் மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவர்.

