பாகிஸ்தானில் கராச்சி நகருக்கு அருகே சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்றில் தீ மூண்டதில் அதிலிருந்த 12 சிறார்கள் உட்பட குறைந்தது 18 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை தெரிவித்தனர்.
பாகிஸ்தானில் ஏற்பட்ட மோசமான வெள்ளம் வடிந்ததைத் தொடர்ந்து, நேற்று பின்னேரம் சொந்த ஊருக்கு அந்தப் பயணிகள் திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த தீ விபத்து நிகழ்ந்தது.
"பேருந்தின் குளிரூட்டும் சாதனத்தில் தீ மூண்டதாகத் தெரிகிறது. என்றாலும், விசாரணை மூலம் உண்மையான காரணம் தெரியவரும்," என்று காவல்துறை அதிகாரி ஹாஷிம் புரோஹி கூறினார்.
"வெள்ளத்தால் சேதமடைந்த தங்கள் வீடுகளைச் சரிசெய்ய பயணிகள் கிராமத்திற்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த தீச்சம்பவம் நிகழ்ந்துவிட்டது," என்று மாவட்ட சுகாதார அதிகாரி வினோத் குமார் சொன்னார்.
பேருந்தில் ஏறக்குறைய 50 பேர் இருந்ததாகத் தெரிகிறது.

