பெட்டாலிங் ஜெயா: எதிர்வரும் மலேசியப் பொதுத் தேர்தலை முன்னிட்டு தனது கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் மூன்று மாநிலச் சட்டமன்றங்களைக் கலைக்கப்போவதில்லை என்று பாஸ் கட்சி தெரிவித்துள்ளது.
பாஸ் கட்சியின் தலைமையகத்தில் அதன் மத்திய செயல் குழு நேற்று கூடியது. அதற்குப் பிறகு அக்கட்சியின் தலைவர் திரு அப்துல் ஹாடி அவாங் இந்தத் தகவலை வெளியிட்டார்.
"கிளந்தான், திரங்கானு, கெடா ஆகிய மாநிலங்களில் சட்டமன்றங்களைக் கலைக்கப்போவதில்லை என்று கட்சி முடிவெடுத்துள்ளது. 15வது பொதுத் தேர்தலைச் சந்திக்க பெரிக்காத்தான் நேஷனலுடனான கூட்டணியை வலுப்படுத்துவோம். முஸ்லிம்களை ஒன்றிணைப்பதன் அடிப்படையில் எங்கள் கூட்டணி அமையும்," என்றார் அவர்.
மலேசியாவின் நாடாளுமன்றம் அண்மையில் கலைக்கப்பட்டது. அடுத்த மாத தொடக்கத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலை நடத்துவது குறித்து மாநிலங்கள் பரிசீலித்து வருகின்றன.
சட்டமன்றங்கள் கலைக்கப்படாமல் அடுத்த ஆண்டு வரை தொடரலாம். அதன் பிறகு அவற்றைக் கட்டாயம் கலைத்து தேர்தல் நடத்த வேண்டும்.
மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு முன்பே கிளந்தான், திரங்கானு, கெடா ஆகிய மாநிலங்களில் சட்டமன்றங்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்பு கலைக்கப்படாது என்று பாஸ் அறிவித்திருந்தது.
அடுத்த மாதம் நடுப்பகுதியி
லிருந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை பருவமழைக்காலம் காரணமாக மலேசியாவில் வெள்ளம் ஏற்படும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மலேசியத் தீபகற்பத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள மாநிலங்கள் வெகுவாகப் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, வெள்ளத்தை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படும் என்று பாஸ் கட்சி கூறியது. இதன் காரணமாக தனது ஆட்சியின்கீழ் இருக்கும் சட்டமன்றங்கள் தற்போது கலைக்கப்படாது என்று அது திட்டவட்டமாகக் கூறியது.
இதற்கு முன்பு நடந்த தேர்தல்களில் மலேசியர்களுக்கு இரண்டு வாக்குச் சீட்டுகள் தரப்படுவது வழக்கமானதாக இருந்தது. ஒன்று நாடாளுமன்றத் தேர்தலுக்காக, மற்றொன்று சட்டமன்றத் தேர்தலுக்கானது. மலேசியாவில் 13 மாநிலங்கள் உள்ளன.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் சட்டமன்றம் இருக்கிறது. மாநிலங்கள் முதல்வர்களின் தலைமையின்கீழ் இயங்குகின்றன.
அண்மையில் கலைக்கப்பட்ட மத்திய அரசாங்கக் கூட்டணியில் பாஸ் கட்சியும் இடம்பெற்றிருந்தது. அக்கூட்டணிக்குப் பிரதமர் என்கிற முறையில் அம்னோவின் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமைதாங்கினார்.
இதற்கிடையே, எதிர்க்கட்சியான பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் கட்டுப்பாட்டில் மூன்று மாநிலங்கள் இருக்கின்றன.
அவற்றில் சிலாங்கூர், நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றங்களைத் தற்போது கலைக்கப்போவதில்லை என்று அக்கூட்டணிக்குத் தலைமைதாங்கும் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
ஆனால் அக்கூட்டணியின் வசம் உள்ள பினாங்கு மாநிலத்தின் சட்டமன்றம் கலைக்கப்படக்கூடும்.
இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் சாபா, சரவாக், ஜோகூர், மலாக்கா ஆகிய நான்கு மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தப்பட்டுவிட்டன.
எனவே, இந்த நான்கு மா
நிலங்களிலும் சட்டமன்றங்களைக் கலைக்காத மாநிலங்களிலும் உள்ள வாக்காளர்கள் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலுக்கு மட்டுமே வாக்களிப்பர்.
தேசிய முன்னணியின் கட்டுப்பாட்டின்கீழ் பாஹாங், பெர்லிஸ், பேராக் ஆகிய மூன்று மாநிலங்கள் உள்ளன. இந்த மூன்று மாநிலங்களின் சட்டமன்றங்கள் கூடிய விரைவில் கலைக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

