பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் 15வது பொதுத் தேர்தலையொட்டி பாஹாங் மாநிலத்தின் பெக்கான் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட ஐந்து பேர் முன்மொழியப்பட்டுள்ளனர்.
அந்தப் பட்டியலில் முன்னாள் மலேசியப் பிரதமரும் 1எம்டிபி மோசடி வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு காஜாங் சிறையில் 12 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நஜிப் ரசாக்கின் பெயரும் இடம்பெற இருக்கிறது என்று அம்னோவின் பெக்கான் பிரிவு துணைத் தலைவர் ஸாம்ரி ராம்லி தெரிவித்துள்ளார்.
மற்ற நால்வரின் பெயர்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.
1982க்கும் 1986க்கும் இடைப்பட்ட காலத்தைத் தவிர்த்து பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினராக 1976ஆம் ஆண்டிலிருந்து நஜிப் பதவி வகித்து வருவதாக அவர் கூறினார். 1982-1986 காலகட்டத்தில் பாஹாங்கின் முதல்வராக நஜிப் பதவி வகித்தார்.
"பெக்கான் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட நஜிப்பின் பிள்ளைகளுக்குத் தகுதி இருந்தும் அவர்களை அங்கு போட்டியிட வைப்பதற்கு எவ்வித திட்டமும் இல்லை.
"பெக்கானில் போட்டியிட யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் நஜிப்புக்குப் பொது மன்னிப்பு கிடைத்தால் அத்தொகுதியை அவரிடமே திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்," என்றார் திரு ஸாம்ரி.
மலேசிய மாமன்னரிடமிருந்து பொது மன்னிப்பு கேட்டு விடுதலை பெற நஜிப் விண்ணப்பம் செய்துள்ளார்.
அந்த விண்ணப்பம் இன்னும் நிலுவையில் உள்ளது.

