மிக வேகமான 'ஹாட்ரிக்';
லிவர்பூல் அசத்தல் வெற்றி
கிளாஸ்கோ: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் கிளாஸ்கோ ரேஞ்சர்ஸ் குழுவை 7-1 எனும் கோல் கணக்கில் லிவர்பூர்ல் புரட்டி எடுத்தது. மாற்று ஆட்டக்காரராகக் களமிறங்கிய முகம்மது சாலா சாம்பியன்ஸ் லீக் வரலாற்றிலேயே மிக வேகமான 'ஹாட்ரிக்'கைப் பதிவு செய்தார். இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு முந்திய சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை லிவர்பூல் வலுப்படுத்தியுள்ளது.
தரப்புக்கு மூன்று கோல்கள் போட்டு பார்சா, இன்டர் சமநிலை
பார்சிலோனா: பார்சிலோனாவும் இன்டர் மிலானும் தரப்புக்கு மூன்று கோல்கள் போட்டு சமநிலை கண்டன. விறுவிறுப்பாக நடந்த இந்த சாம்பியன்ஸ் லீக் காற்பந்தாட்டத்தில் பார்சிலோனா தோல்வியின் விளிம்பில் இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ராபர்ட் லெவன்டாவ்ஸ்கி போட்ட கோல் பார்சிலோனாவைக் காப்பாற்றியது. இந்த சமநிலை மூலம் இரு குழுக்களுக்கும் தலா ஒரு புள்ளி கிடைத்தது. தோல்வியைத் தவிர்த்த பார்சிலோனா, போட்டியிலிருந்து வெளியேறும் நிலையைத் தவிர்த்தது.
அயேக்சை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய நெப்போலி
நேப்பல்ஸ்: அயேக்ஸ் ஆம்ஸ்டர்டாம் குழுவை 4-2 எனும் கோல் கணக்கில் தோற்கடித்து சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் அடுத்த சுற்றுக்கு நெப்போலி தகுதி பெற்றுள்ளது. இப்பருவத்துக்கான சாம்பியன்ஸ் லீக் போட்டியில் களமிறங்கிய அனைத்து ஆட்டங்களிலும் நெப்போலி வெற்றியைப் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கவனம் சிதறாமல் இருக்கும்படி ஸ்பர்சுக்கு அழைப்பு
லண்டன்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்தாட்டத்தில் ஜெர்மனியின் ஃபிராங்ஃபர்ட் குழுவை 3-2 எனும் கோல் கணக்கில் ஸ்பர்ஸ் வீழ்த்தியது. இதன்மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை அது வலுப்படுத்தியுள்ளது.
இருப்பினும், ஆட்டத்தின்போது ஸ்பர்ஸ் ஆட்டக்காரர்கள் கவனம் சிதறாமல் நிதானமாக விளையாட வேண்டும் என்று அக்குழுவின் நிர்வாகி ஆண்டோனியோ கோண்ட்டே கேட்டுக்கொண்டார்.
கவனமின்மை காரணமாக எதிரணிகள் கோல் போடுவதாகவும் அத்தகைய சூழல் ஸ்பர்சுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

