ஜகார்த்தா: 'பிஎஸ்எஸ்ஐ' என்றழைக்கப்படும் இந்தோனீசியக் காற்பந்துச் சங்கத்தின் தலைவர் பதவிவிலகவேண்டும் என்று அந்நாட்டின் காற்பந்து விளையாட்டரங்கம் ஒன்றில் பலரைப் பலிவாங்கிய சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் செயற்குழு குரல் கொடுத்துள்ளது. இந்தோனீசியாவின் முன்னணி அமைச்சர் ஒருவர் இதைத் தெரிவித்தார்.
கிழக்கு ஜாவாவில் உள்ள மாலாங் நகரில் இம்மாதம் ஒன்றாம் தேதியன்று அரேமா, பெர்செபாயா சுராபாயா ஆகிய குழுக்கள் மோதிய ஆட்டத்திற்குப் பிறகு சில ரசிகர்கள் திடலுக்குள் நுழைந்த பிறகு கலவரம் மூண்டது.
நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர்ப்புகையைப் பீய்ச்சியடித்தனர். பலர் மிதிபட நேரிட்டது. சிறுவர்கள் உட்பட 132 பேர் மாண்டனர்.
அச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டது.
"பொதுவாக இந்தோனீசிய காற்பந்துச் சங்கத்தின் விவகாரத்தில் அரசாங்கம் தலையிடமுடியாது. எனினும், நற்பண்புகள், நல்ல கொள்கைகள், சிறந்த கலாசாரம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஒரு நாட்டில் காற்பந்துச் சங்கத்தின் தலைவரும் அனைத்து நிர்வாகக் குழு உறுப்பினர்களும் பொறுப்பேற்று பதவி விலகப் பரிந்துரைக்கப்படுகிறது," என்று செயற்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவத்திற்கு இந்தோனீசிய காற்பந்துச் சங்கம் பொறுப்பேற்கவேண்டும் என்று அந்நாட்டின் மூத்த பாதுகாப்பு அமைச்சரான மாஹ்ஃபுட் எம்டி செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். அதற்குப் பிறகு விசாரணை நடத்திய செயற்குழுவின் 124 பக்க அறிக்கையை அவர் வெளியிட்டார்.
கண்ணீர்ப்புகைதான் மரணங்களுக்கான முக்கியக் காரணம் என்றும் தெரியவந்தது. பயன்படுத்தப்பட்ட கண்ணீர்ப்புகையின் வீரியம் தொடர்பில் வேறொரு குழு தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் திரு மாஹ்ஃபுட் தெரிவித்தார்.

