லண்டன்: பிரிட்டிஷ் பிரதமர் லிஸ் டிரஸ் தமது பதவியில் அதிக நாள்கள் நீடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தான் நிதி அமைச்சராக நியமித்த திரு குவாசி குவார்ட்டெங்கைத் திருவாட்டி டிரஸ் நேற்று முன்தினம் பணிநீக்கம் செய்தார். அதோடு, தாம் அறிவித்த பல பொருளியல் திட்டங்களைத் தள்ளுபடி செய்தார்.
"நமது நாட்டின் பொருளியல் நிலைத்தன்மையை உறுதிசெய்வதே எமக்கு மிகவும் முக்கியமானது, அதனால் திட்டவட்டமாக இன்று செயல்பட்டேன். தேசிய நலனைக் கருத்தில்கொண்டே நான் பிரதமராகச் செயல்படுவேன்," என்று நேற்று முன்தினம் திரு குவார்ட்டெங்கைப் பணிநீக்கம் செய்த பிறகு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் திருவாட்டி டிரஸ் கூறினார். பதவி விலகும் எண்ணம் தமக்கு இல்லை என்றும் தாம் உறுதியளித்ததைச் செய்து முடிக்க மனவுறுதியுடன் இருப்பதாகவும் அவர் சொன்னார்.
எனினும், சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு பிரதமராகப் பதவியேற்றுக்கொண்ட திருவாட்டி டிரஸ், அப்பதவியில் நீடிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
வரிக் கட்டணங்களைக் குறைத்து பொருளியலை ஊக்குவிக்கப்போவதாக உறுதியளித்து அவர் பதவிக்கு வந்தார். கொள்ளைநோய்ப் பரவல், உலகளாவிய பொருளியல் நெருக்கடி ஆகியவற்றைத் தொடர்ந்து அரசாங்கத்திற்கான வருமானம் குறைக்கப்படுவது நல்லதல்ல என்று பொருளியல் வல்லுநர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் அறிவுரையையும் மீறி திருவாட்டி டிரஸ் அவ்வாறு செய்தார்.
இதற்கிடையே, சில வரிக் கட்டணங்கள் நிச்சயமாக உயர்த்தப்படும் என்று பிரிட்டனின் புதிய நிதி அமைச்சரான ஜெரிமி ஹண்ட் தெரிவித்துள்ளார். இதுவும் திருவாட்டி டிரஸ் முதலில் கடைப்பிடித்த பொருளியல் ரீதியான போக்கிற்கு மாறான ஒரு நடவடிக்கையாகும்.
மேலும், அரசாங்கம் செலவழிக்கவுள்ள தொகை, இதற்கு முன்பு திட்டமிடப்பட்டதைவிடக் குறைவாக இருக்கும் என்றும் திருவாட்டி டிரஸ் கூறியிருந்தார்.

