கோலாலம்பூர்: தான் ஆட்சி புரியும் மூன்று பகுதிகளில் பொதுத் தேர்தலுக்குப் பிறகு மாநிலத் தேர்தலை நடத்தும் மலேசியாவின் முக்கிய எதிர்தரப்புக் கூட்டணியான பக்கத்தான் ஹரப்பானின் முடிவில் மாற்றம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் அடுத்த மாதம் பொதுத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனுடன் சேர்த்து பினாங்கில் மாநிலத் தேர்தலை நடத்துமாறு பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் இடம்பெறும் 'டிஏபி' எனும் ஜனநாயக செயல் கட்சி கேட்டுக்கொண்டது.
பினாங்கு மாநிலத்தில் உள்ள ஜனநாயக செயல் கட்சியின் பிரிவுடன் கட்சித் தலைவர் லிம் குவான் எங்கும் பக்கத்தான் ஹரப்பானிடம் அவ்வாறு கேட்டுக்கொண்டார். எனினும், பக்கத்தான் ஹரப்பானின் முடிவில் மாற்றம் இல்லை.
ஆண்டிறுதியில் ஏற்படக்கூடிய வெள்ளத்தை சரியாகக் கையாளாமல் தான் ஆளும் சிலாங்கூர், பினாங்கு, நெகிரி செம்பிலான் ஆகியவற்றில் மாநிலத் தேர்தல் நடத்தப்படாது என்று பக்கத்தான் ஹரப்பான் முன்னதாகக் கூறியிருந்தது. சென்ற ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 54 பேர் மாண்டனர். வெள்ளத்தால் மலேசியாவிற்கு ஆறு பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பொருளியல் இழப்பும் ஏற்பட்டது.
கடந்த திங்கட்கிழமையன்று மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. அதற்குப் பிறகு 60 நாள்களுக்குள் பொதுத் தேர்தலை நடத்தவேண்டும். பொதுத் தேர்தலை நடத்த ஒரு பில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் செலவாகும் என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருந்தது.

