நியூயார்க்: சவூதி அரேபியா உக்ரேனுக்கு 400 மில்லியன் டாலர் (570 மில்லியன் வெள்ளி) மதிப்புள்ள மனிதாபிமான உதவி வழங்கவுள்ளது.
அண்மையில் ரஷ்யாவின் பக்கம் நின்று எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துக்கொள்ள சவூதி அரேபியா முடிவெடுத்தது. சர்ச்சைக்கு உள்ளான அந்த விவகாரத்தைத் தொடர்ந்து இப்போது உக்ரேனுக்கு உதவி வழங்கப்போவதாக அறிவித்துள்ளது.
எண்ணெய் உற்பத்தி தொடர்பில் சவூதி அரேபியாவின் முடிவு அமெரிக்க அதிபர் ஜோ பைடனை கோபப்படுத்தியது. அதையடுத்து சவூதி அரேபியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான அனைத்து தொடர்புகளையும் குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்காவின் முன்னணி அரசியல் தலைவர்கள் குரல் எழுப்பினர்.
இதற்கிடையே, 725 மில்லியன் டாலர் (ஒரு பில்லியன் வெள்ளி) மதிப்புள்ள பாதுகாப்பு சார்ந்த உதவியை உக்ரேனுக்கு வழங்கவிருப்பதாக அமெரிக்க அரசாங்கம் நேற்று முன்தினம் அறிவித்தது. ரஷ்யா உக்ரேனில் பொதுமக்களைத் தாக்கியதையும் ரஷ்யப் படைகளின் மோசமான செயல்களுக்கு ஆதாரம் கூடுவதையும் தொடர்ந்து இந்த உதவி வழங்கப்படுவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் கூறினார்.