பாகான் டாத்தோ: மலேசியாவின் அடுத்த பொதுத் தேர்தலில் 'பாரிசான் நேஷனல்' எனும் தேசிய முன்னணிக் கூட்டணியின் பெரும்பாலான வேட்பாளர்கள் புதிதாகக் களமிறக்கப்படுபவர்கள். தேசிய முன்னணியின் தலைவர் அகமது ஸாஹிட் ஹமிடி இதைத் தெரிவித்துள்ளார்.
அத்தகைய வேட்பாளர்கள் தரமான கல்வி பயின்றவர்களாகவும் மக்களுக்கு உதவுவதில் அதிக கடப்பாடு கொண்டவர்களாகவும் இருப்பர் என்று பேராக் மாநிலத்தில் உள்ள பாகான் தாத்துக் பகுதியில் நடைபெற்ற அம்னோ கட்சி சந்திப்பில் திரு ஸஹிட் கூறியதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
மேலும், வேட்பாளர்களில் 30 விழுக்காட்டினர் பெண்களாக இருக்கவேண்டும் என்று தேசிய முன்னணி உறுப்பினர்கள் குரல் எழுப்பியிருந்தனர். அந்த கோரிக்கையைப் பூர்த்திசெய்ய தேசிய முன்னணி கூடுமானவரை முயற்சி செய்யும் என்றும் திரு ஸாஹிட் குறிப்பிட்டார்.
அதோடு, 'சாபோட்டாஜ்' எனப்படும் பிறரைப் பிரச்சினையில் சிக்கவைக்கும் செயல்கள் நிறுத்தப்படவேண்டும் என்று மலேசிய பிரதமர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் வலியுறுத்தினார். வேட்பாளர்களாக யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் கட்சியின் நலனுக்கே உறுப்பினர்கள் முன்னுரிமை வழங்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
தேர்தலில் வேட்பாளர்கள் தனிநபர்களாகப் போட்டியிடவில்லை என்றும் அவர்களின் வெற்றி தேசிய முன்னணியின் வெற்றியாகும் என்பதையும் திரு இஸ்மாயில் சாப்ரி நினைவூட்டினார்.
சென்ற வாரம் திங்கட்கிழமையன்று மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மலேசியாவின் 15வது பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 60 நாள்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படவேண்டும்.

