ஜார்ஜ்டவுன்: மலேசியாவின் பினாங்கு தீவில் நேற்று முன்தினம் இரவு ஒன்பது மணியிலிருந்து கனமழை பொழிந்தது. அதனால் பினாங்கு ஆற்றில் நீரின் அளவு அபாய கட்டத்திற்கு 2.5 மீட்டர் அதிகமாக இருந்தது.
அதைத் தொடர்ந்து நாரான் உள்ளிட்ட கிராமங்களில் வெள்ள நீர் பல வீடுகளுக்குள் புகுந்ததாக பினாங்கு நலன், சுற்றுச்சூழல் குழுவின் தலைவர் ஃபீ பூன் போ தெரிவித்தார். எனினும், ஆகக் கடைசி நிலவரப்படி வெள்ள நீர் வடிந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பெர்லிஸ் மாநிலத்தின் கங்கார் நகரின் மூன்று பகுதிகளிலும் திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது. சென்டுவா, செரியாப், பாக்காவ் ஆகிய கிராமங்கள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் என்று பெர்லிஸ் குடிமைத் தற்காப்புப் படையின் பேச்சாளர் கூறினார்.

