இலங்கையை அதிரவைத்த நமீபியா
கீலோங் (ஆஸ்திரேலியா): டி20 ஆண்கள் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கையை வென்றுள்ளது உலகத் தரவரிசையில் 14வது இடத்தில் இருக்கும் நமீபியா (படம்). இந்த 'ஏ' பிரிவு ஆட்டத்தில் 55 ஓட்டங்களில் நமீபியா வெற்றிகண்டது.
முதலில் பந்தடித்த நமீபியா, ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ஓட்டங்களை எடுத்தது. அதற்குப் பிறகு பந்தடித்த இலங்கை 19 ஓவர்களில் 108 ஓட்டங்களிலேயே எல்லா விக்கெட்டுகளையும் இழந்தது.
நமீபியா, டெஸ்ட் தொடர்களில் ஆடும் அணி ஒன்றை இதற்கு முன்பு ஒருமுறை மட்டுமே வென்றிருந்தது.
ஐக்கிய அரபுச் சிற்றரசுகளை வென்றது நெதர்லாந்து
கீலோங் (ஆஸ்திரேலியா): மற்றோர் 'ஏ' பிரிவு ஆட்டத்தில் நெதர்லாந்து (படம்), ஐக்கிய அரபுச் சிற்றரசுகளை மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
முதலில் பந்தடித்த ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 111 ஓட்டங்களையே எடுத்தது. அதைத் தொடர்ந்து ஆட்டத்தில் வெற்றிபெற நெதர்லாந்து 112 ஓட்டங்களை எடுக்கவேண்டியிருந்தது.
எனினும், இலக்கை அடைய சிரமப்பட்டது நெதர்லாந்து. ஒரே பந்து எஞ்சியிருந்தபோது ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 112 ஓட்டங்களை எடுத்து நெதர்லாந்து வென்றது.

