மாஸ்கோ: ரஷ்யாவின் ராணுவப் பயிற்சித் தளம் ஒன்றில் ஆயுதம் ஏந்திய இருவர், 11 பேரைச் சுட்டுக்கொன்றதாக அந்நாட்டின் தற்காப்பு அமைச்சு கூறியுள்ளது. பெயர் வெளியிடப்படாத முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் ஒரு வட்டாரத்தைச் சேர்ந்த அந்த இரு தாக்குதல்காரர்களும் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தாக்குதலில் குறைந்தது 15 பேர் காயமுற்றனர்.
உக்ரேன் போரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கடந்த சில வாரங்களாகத் தொடர் பின்னடைவுகளை எதிர்கொண்டு வருகிறார். இந்தத் தாக்குதலும் அவற்றில் அடங்கும்.
அச்சம்பவம் நிகழ்ந்தபோது உக்ரேன் எல்லைக்கு அருகே இருக்கும் ரஷ்யாவின் பெல்கொரோட் நகரில் உள்ள எண்ணெய்க் கிடங்கு ஒன்று நேற்று முன்தினம் தாக்கப்பட்டதாக அப்பகுதியின் ஆளுநர் வியாச்செஸ்லாவ் கிளாட்கோவ் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து கிடங்கு தீப்பிடித்துக்கொண்டது.
சம்பவ இடத்திலேயே அவசரச் சேவைகள் வழங்கப்பட்டதாகவும் தீ பரவும் அபாயம் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
தீப்பிடித்துக்கொண்ட எண்ணெய்க் கிடங்கு பெல்கொரோட் நகருக்கு அருகே இருக்கும் சாஸும்னொய் எனும் கிராமத்தில் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

