லண்டன்: கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கு முன்பு வரி தொடர்பாக பிரிட்டிஷ் பிரதமர் லிஸ் டிரஸ் அறிவித்த பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாது என்று அந்நாட்டின் புதிய நிதி அமைச்சர் ஜெரமி ஹன்ட் நேற்று தெரிவித்தார்.
தாம் எடுக்கும் இந்த அதிரடி முடிவால் ஆண்டுக்கு கூடுதலாக 32 பிலிய்யின் பவுண்டு ($52 பில்லியன்) வருவாய் கிடைக்கும் என்றார் அவர்.
அரசாங்கம் அறிவித்த மிகப் பெரிய எரிசக்தி விலை வரம்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை மட்டுமே நடப்பில் இருக்கும் என்று திரு ஹன்ட் தெரிவித்தார்.
அதை அடுத்து, எளிதில் பாதிப்படையக்கூடிய குடும்பங்
களுக்கு உதவும் வழிவகைகளைக் கண்டறிய பிரிட்டிஷ் அரசாங்கம் முற்படும் என்று அமைச்சர் ஹன்ட் உறுதி அளித்தார்.
எதிர்காலச் செலவுத் திட்டங்கள் குறித்து முடிவெடுக்க இவ்வாரம் அனைத்து அமைச்சர்களுடன் கலந்துரையாட இருப்பதாக அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு பிரிட்டிஷ் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
இந்த அறிவிப்புக்குப் பிறகு பிரிட்டிஷ் அரசாங்க முறி பத்திரங்கள், பிரிட்டிஷ் பவுண்டு ஆகியவற்றின் மதிப்பு கூடின.
திரு ஹன்ட் எடுத்துள்ள இந்த அதிரடி முடிவால் திருவாட்டி டிரஸ்ஸின் பிரதமர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
பிரதமராக இருந்து அவர் எடுத்த பல முடிவுகளை அவரது அமைச்சர்கள் நிராகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் அவர் பிரதமர் பதவியில் நீடிப்பது சந்தேகம் என்ற ஊகம் எழுந்துள்ளது.
திருவாட்டி டிரஸ் அண்மையில்தான் பிரிட்டிஷ் பிரதமராகப் பதவி ஏற்றார்.

