விளையாட்டுச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

2 mins read
c161ef67-3afb-4e71-ae49-40a6384ac81c
-

சாலா போட்ட வெற்றி கோல்; முதல்முறையாகத் தோற்ற சிட்டி

லிவர்பூல்: இப்பருவத்துக்கான இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி தோல்வியின் பிடியில் முதன்முறையாகச் சிக்கியது.

நேற்று முன்தினம் லிவர்பூலின் ஆன்ஃபீல்ட் விளையாட்டரங்கத்தில் லிவர்பூலும் சிட்டியும் மோதின. பிற்பாதி ஆட்டத்தில் லிவர்பூல் கோல்காப்பாளர் அலிசன் அனுப்பிய பந்து சாலாவிடம் சென்றது.

பந்தைத் தமது கட்டுக்குள் வைத்துக்கொண்டு கோல் நோக்கி விரைந்த சாலா அதை வலைக்குள் சேர்த்தார். 1-0 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் வெற்றி பெற்றது.

மேன்யூ-நியூகாசல் சமநிலை;

ஆர்சனல் வெற்றி

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட்டும் நியூகாசலும் கோல் ஏதுமின்றி சமநிலை கண்டன.

கிடைத்த வாய்ப்புகளை கோலாக்க முடியாதது ஏமாற்றம் அளிப்பதாக யுனைடெட்டின் நிர்வாகி டென் ஹாக் வருத்தம் தெரிவித்தார்.

ஆர்சனலுக்கு எதிராக லீட்ஸ் எவ்வளவு போராடியும் நேற்று முன்தினம் நடைபெற்ற இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் 1-0 எனும் கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது.

எல் கிளாசிகோ: பார்சிலோனாவை ஓரங்கட்டிய ரியால் மட்ரிட்

மட்ரிட்: ஸ்பெயினின் லா லீகா காற்பந்துப் போட்டியில் பரமவைரிகளான ரியால் மட்ரிட்டும் பார்சிலோனாவும் மோதின. இதில் 3-1 எனும் கோல் கணக்கில் ரியால் வாகை சூடியது.

இந்த வெற்றியின் மூலம் லீக் பட்டியலில் பார்சிலோனாவைப் பின்னுக்குத் தள்ளி ரியால் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

ஆசியக் காற்பந்துக் கிண்ணம் 2023; கத்தார் ஏற்று நடத்துகிறது

கோலாலம்பூர்: அடுத்த ஆண்டு நடைபெறும் ஆசியக் காற்பந்துக் கிண்ணப் போட்டியை கத்தார் ஏற்று நடத்துகிறது. இந்த அதிகாரபூர்வத் தகவலை ஆசியக் காற்பந்துக் கூட்டமைப்பு நேற்று அறிவித்தது.

கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக போட்டியை ஏற்று நடத்த இருந்த சீனா விலகியதை அடுத்து கத்தாருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

டி20: கொவிட்-19 பாதிப்பு இருந்தாலும் களமிறங்கலாம்

மெல்பர்ன்: இவ்வாண்டு நடைபெறும் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆட்டக்காரர்கள் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலும் களமிறங்கலாம் என்று அனைத்துலக கிரிக்கெட் மன்றம் அறிவித்துள்ளது.

போட்டியின்போது ஆட்டக்காரர்களுக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டால் அவர்கள் கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ளத் தேவையில்லை என்றும் தனிமைப்படுத்தப்படத் தேவையில்லை என்றும் மன்றம் கூறியது. பாதிக்கப்பட்ட ஆட்டக்காரர்களால் களமிறங்க முடியுமா என்பதை மருத்துவர்கள் மதிப்பிடுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கிரிக்கெட்: பயிற்சி ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்தியா

பிரிஸ்பன்: டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா களமிறங்கியது.

இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ஓட்டங்கள் குவித்தது.

ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 180 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்தியா 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.