பாரிஸ்: பிரான்சில் உள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு நேற்று அழைப்பு விடுத்ததை அடுத்து, ரயில் சேவையும் பள்ளிகளும் பாதிக்கப்பட்டன
பணவீக்க அதிகரிப்பைக் கண்டித்து வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
எண்ணெய் சுத்திகரிப்புத் துறை ஊழியர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கியதால் பெட்ரோல் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் சிலரை வேலைக்குத் திரும்ப அரசாங்கம் வற்புறுத்தியதாக தொழிற்சங்கங்கள் கூறின.
இது ஊழியர்களுக்கு இருக்கும் வேலைநிறுத்தப் போராட்ட உரிமையைப் பறிப்பதற்குச் சமம் என்று அவை சாடின.
அரசாங்கம் இவ்வாறு நடந்துகொள்வதால் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஊழியர்கள் தீவிரம் காட்டுவர் என்று தொழிற்சங்கங்கள் நம்பிக்கை தெரிவித்தன.
பிரெஞ்சு அதிபராக கடந்த மே மாதத்தில் இமானுவல் மெக்ரோன் மீண்டும் பதவி ஏற்றதிலிருந்து எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் அவருக்குப் பெரும் தலைவலியாக இருந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று நடத்தப்பட்ட நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை பிரான்ஸ் மக்கள்தொகையில் 39 விழுக்காட்டினர் மட்டுமே ஆதரித்ததாக பிரெஞ்சு தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்தது;
49 விழுக்காட்டினர் எதிர்ப்பு தெரிவித்தனர். எண்ணெய் சுத்திகரிப்பு ஊழியர்கள் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்தை எதிர்ப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
நேற்றைய வேலைநிறுத்தப் போராட்டத்தில் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களில் 10 விழுக்காட்டுக்கும் குறைவானவர்களே ஈடுபட்டனர் என்றும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கிய தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கை அதைவிடக் குறைவு என்றும் பிரெஞ்சு கல்வி அமைச்சு கூறியது.
வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களில் பெரும்பாலானோர் தொழில்சார்ந்த கல்வி நிலையங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள்.
வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக பாரிசுக்கும் லண்டனுக்கும் இடையிலான சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

