மாஸ்கோ: உக்ரேனிடமிருந்து கைப்பற்றிய நிலப்பகுதிகளை அணு
வாயுதங்களைக் கொண்டு பாதுகாப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் மற்ற பகுதிகளுக்கு அளிக்கப்படும் அதே பாதுகாப்பை அப்பகுதிகளுக்கும் வழங்குவதாக ரஷ்ய அரசாங்கம் கூறியது.
ரஷ்யாவின் இறையாண்மையைப் பாதுகாக்க அணுவாயுதங்களைப் பயன்படுத்த தயார் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், உக்ரேனுக்குச் சொந்தமான மின்சார நிலையங்களில் பத்தில் மூன்றை ரஷ்யப் படைகள் அழித்துவிட்டதாக உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.
உக்ரேனின் எரிசக்திக் கட்டமைப்பைக் குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்துவதாகவும் இதன் விளைவாக நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் இன்றி மக்கள் இருளில் வாடுவதாகவும் அவர் குறைகூறினார்.
புட்டினிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பு இனி இல்லை என்று திரு ஸெலென்ஸ்கி கூறி தமது அதிருப்தியை வெளிப்
படுத்தினார்.
இதற்கிடையே, ரஷ்யாவின் தெற்குப் பகுதியில் உள்ள நகரம் ஒன்றில் குடியிருப்புக் கட்டடம் மீது ரஷ்ய ராணுவ விமானம் மோதியது. இதில் குறைந்தது 13 பேர் மாண்டனர்.
விமானம் மோதி நொறுங்குவதற்குள் அதில் இருந்த இரண்டு விமானிகள் வான்குடை மூலம் தரையிறங்கினர்.
விபத்தில் காரணமாக அந்த ஒன்பது மாடிக் கட்டடம் தீப்பற்றி எரிந்தது. குறைந்தது 68 பேர் கட்டடத்திலிருந்து உயிருடன் மீட்கப்பட்டதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

