பேங்காக்: பாட் நாணயத்தின் மதிப்பு குறைவாக இருப்பது கொள்ளைநோய்ப் பரவலுக்குப் பிறகு தாய்லாந்தின் சுற்றுப்பயணத் துறை மீண்டுவரக் கைகொடுக்கும் என்று அந்நாட்டின் நிதி அமைச்சர் அர்க்கொம் டெர்ம்பிட்டாயாபைசித் கூறியுள்ளார். தாய்லாந்தின் சுற்றுப்பயணத் துறை மீண்டுவருவதைப் பொறுத்ேத அந்நாட்டின் பொருளியல் மேம்படுவதைக் கணிக்கமுடியும்.
"செலவழிக்கும் தொகைக்கு ஏற்ற மகிமையை தாய்லாந்து வழங்குகிறது," என்று திரு அர்க்கொம் சொன்னார். பாட் தொடர்ந்து வலுவிழந்திருப்பது மலிவு விலையில் சேவைகளையும் பொருள்களையும் நாடும் பயணிகளை ஈர்க்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பில் இடம்பெறும் நாடுகளின் நிதி அமைச்சர்கள் சந்திப்பு நடத்தினர். அந்நிகழ்வில் தனிப்பட்ட முறையில் நடைபெற்ற நேர்காணலில் திரு அர்க்கொம் பேசினார்.
பாட் நாணயத்தின் நிலை, தென்கிழக்காசியாவில் இவ்வாண்டு இதுவரை இரண்டாவது ஆக மோசமானது. இந்நிலை 2024ஆம் ஆண்டிலும் நீடிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
எனினும், இன்னமும் போட்டித்தன்மை மிகுந்த நாணயமாக பாட் இருக்கிறது என்றும் மற்ற நாடுகள் அளவிற்கு பணம் வெளியாவது குறித்து தாய்லாந்தின் மத்திய வங்கி கவலைப்படத் தேவையில்லை என்றும் அவர் சுட்டினார்.
தாய்லாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுப்பயணத் துறை 12 விழுக்காடு பங்கு வகிக்கிறது.
'வலுவிழந்த பாட் நாணயம் தாய்லாந்தின் சுற்றுப்பயணத் துறைக்கு உதவுகிறது'