பெட்டாலிங் ஜெயா: எல்லா விதத்திலும் பெர்சத்து கூட்டணியுடன் ஒத்துழைப்பதை அம்னோ கட்சி நிராகரிப்பதாக அக்கட்சியின் தலைவர் அகமது ஸாஹிட் ஹமிடி கூறியுள்ளார். அம்னோ கட்சி, அது இடம்பெறும் 'பாரிசான் நேஷனல்' எனும் தேசிய முன்னணி ஆகியவற்றின் இடத்தை எடுக்க பெர்சத்து அமைக்கப்பட்டதே நிராகரிப்புக்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.
"அம்னோவை அதன் எதிரியுடன் இணைந்து செயல்பட வைப்பதற்கு காரணம் எப்படி இருக்கமுடியும்?" என்று தேசிய முன்னணியின் தலைவருமான திரு ஸாஹிட் நேற்று ஃபேஸ்புக் பதிவில் கூறினார். அரசியல் ரீதியாக மற்ற கட்சிகளுடன் ஒத்துழைப்பது குறித்து மலேசியாவின் 15வது பொதுத் தேர்தலுக்குப் பிறகுதான் முடிவெடுக்கப்படும் என்று தற்போது இடைக்காலப் பிரதமராகப் பதவி வகிக்கும் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் நேற்று முன்தினம் சொன்னார்.
பெர்சத்துவுடன் ஒத்துழைப்பதை நிராகரிப்பது மலாய் சமூகத்தின் ஒற்றுமையை அழித்துவிடும் என்று சொல்லப்பட்டதை திரு ஸாஹிட் மறுத்தார்.
இதற்கிடையே, மலேசியப் பொதுத் தேர்தலில் ஆளும் தேசிய முன்னணியை எதிர்த்துப் போட்டியிட பாஸ் கட்சி முடிவெடுத்தது அந்நாட்டின் மலாய் இனத்தவரின் வாக்குகளை மேலும் பிரிக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் தொங்கு நாடாளுமன்றம் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் கருதப்படுகிறது.
அம்னோவுக்கும் பெர்சத்துவுக்கும் இடையே நிலவும் பகையால் கூட்டணி வைத்துக்கொள்ள இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் நிலை பாஸ் கட்சிக்கு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அக்கட்சி பெர்சத்துவைத் தேர்ந்தெடுத்தது.

