வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
ஹொபார்ட்: ஆண்கள் டி20 உலகக் கிண்ணத் தொடரின் 'பி' பிரிவு ஆட்டத்தில் 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஸிம்பாப்வேயை வென்றுள்ளது வெஸ்ட் இண்டீஸ்.
முதலில் பந்தடித்த வெஸ்ட் இண்டீஸ் ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ஓட்டங்களை எடுத்தது. 122 ஓட்டங்களை மட்டுமே எடுத்த ஸிம்பாப்வே 18.2 ஓவர்களில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்தது.
'பி' பிரிவில் உள்ள நான்கு அணிகள் ஒவ்வொன்றுக்கும் தற்போது இரண்டு புள்ளிகள் உள்ளன.
மீண்டுவந்து ஸ்காட்லாந்தை அதிரவைத்த அயர்லாந்து
ஹொபார்ட்: மற்றொரு 'பி' பிரிவு ஆட்டத்தில் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வென்றுள்ளது அயர்லாந்து.
முதலில் பந்தடித்த ஸ்காட்லாந்து ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ஓட்டங்களை எடுத்தது. அதற்குப் பிறகு 10 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 61 ஓட்டங்களை மட்டுமே எடுத்திருந்தது அயர்லாந்து. ஆனால் நன்கு மீண்டுவந்து இறுதியில் நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ஓட்டங்களைக் குவித்து வென்றது அயர்லாந்து.
சாதனை படைத்த தமிழர்
கீலோங்: ஆண்கள் டி20 உலகக் கிண்ணத் தொடரின் வரலாற்றில் ஒரே ஆட்டத்தில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் வீரர் என்ற பெருமை தமிழரான கார்த்திக் மெய்யப்பனைச் (படம்) சேரும். ஐக்கிய அரபுச் சிற்றரசுகளும் இலங்கையும் நேற்று முன்தினம் மோதிய 'ஏ' பிரிவு ஆட்டத்தில் இவர் சாதனை படைத்தார். ஆட்டத்தில் 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ஓட்டங்களை எடுத்த இலங்கை. 17.1 ஓவர்களில் 73 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ஐக்கிய அரபுச் சிற்றரசுகள்.

