ஜகார்த்தா: இந்தோனீசியாவின் ஜகார்த்தா நகரில் உள்ள மாபெரும் பள்ளிவாசலில் தீ விபத்து ஏற்பட்டு பெரிய கோபுரம் இடிந்து விழுந்தது.
ஏஏஃப்பி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அதிர்ச்சியூட்டும் காணொளியில் கரும்புகையுடன் கோபுரம் சரிந்து விழுவதைக் காண முடிந்தது.
பள்ளிவாசலின் கீழ் இருந்த ஜகார்த்தா இஸ்லாமிய நிலையமும் தீ விபத்தில் சேதமடைந்தது.
உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று காவல்துறையினர் கூறினர்.
இஸ்லாமிய நிலைய வளாகத்தில் இடம்பெற்று இருந்த பள்ளிவாசலில் புதுப்பிப்புப் பணிகள் நடை பெற்று வந்தன.
"பள்ளிவாசலை தொடர்ந்து புதுப்பிக்கப்படுவதை பற்றி ஆராய்ந்து வருகிறோம். பள்ளிவாசல் மீண்டும் பயன்படுத்தப்படுவதே மிக முக்கியம்," என்று ஜகார்த்தாவின் இடைக்கால ஆளுநர் ஹெரு புடி ஹர்டோனோ தெரிவித்தார்.
பள்ளிவாசலில் மூண்ட தீயை அணைக்க பல மணி நேரமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபுரத்தில் ஊழியர்கள் புதுப் பிப்புப் பணிகள் மேற்கொண்டபோது தீ மூண்டிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். இதன் தொடர்பில் நான்கு கட்டு மான ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்தது.

