வாஷிங்டன்: இவ்வாண்டு இறுதிக்குள் தைவானுக்குள் சீனா ஊடுருவும் சாத்தியம் உள்ளது.
இதற்குப் பதிலடி தரும் வகையில் அமெரிக்க ராணுவம் தயாராக வேண்டும் என்று அமெரிக்க மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தைவான் மீதான சீனாவின் நோக்கம் தெள்ளத் தெளிவாக தெரிவதால் பதற்றத்துக்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
தைவானைக் கைப்பற்ற முன்பைவிட தற்போது சீன அதிபர் ஸி ஜின்பிங் தீவிரம் காட்டலாம் என்று அமெரிக்க கடற்படை நடவடிக்கை களுக்கான அட்மிரல் மைக்கல் கில்டே தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து எச்சரிக்கை விடுக்கும் மூத்த அதிகாரி அட்மிரல் கில்டே.
உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டின் அதிபரான அதிபர் ஸி, 3வது முறையாக ஐந்தாண்டு பதவிக்காலத்தை பெறும் முனைப்பில் இருக்கிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கம்யூனிசக் கட்சி மாநாட்டில் பேசிய அவர், தைவானை சீனாவுடன் இணைக்க படைபலம் பயன்படுத்தும் உரிமை தங்களுக்கு உண்டு என்று கூறினார்.
வரும் 2027ஆம் ஆண்டுக்குள் தைவானை சீனா கைப்பற்ற தயாராகிவிடும் என்று மற்றோர் அமெரிக்க அட்மிரலும் எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில் சிந்தனையாளர்களுடன் கலந்துரையாடிய அட்மிரல் கில்டேயிடம் திரு ஸி ஆற்றிய உரை குறித்து கருத்து கேட்கப்பட்டது.
"அதிபர் ஸி என்ன சொல்கிறார் என்பது மட்டுமல்ல. சீனர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள். என்ன செய்கிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டும்," என்று அட்லாண்டிக் மன்றத்திடம் அட்மிரல் கில்டே தெரிவித்தார்.
"கடந்த இருபது ஆண்டுகளில் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகின்றனர். இந்த வாக்குறுதியையும் நிறைவேற்றலாம்," என்றார் அவர்.
இதற்கிடையே தைவானை சீன அதிபர் ஸி தாக்கினால் அனைத்து சீனர்களுக்கும் பாவம் செய்தவராக அவர் ஆகிவிடுவார் என்று தைவான் உயர் அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.
"தைவான் மீது போர் தொடுத்தால் சீனாவுக்கு வெற்றியும் கிடைக்காது. அனைத்துலக தடைகளையும் அவர் எதிர்நோக்க வேண்டியிருக்கும். அரசதந்திர வழியில் சீனா தனிமைப்படுத்தப்படும்," என்று அந்த அதிகாரி கூறினார்.
அண்மைய காலமாக தைவானுக்கு அரசியல், ராணுவ நெருக்கடியை சீனா ஏற்படுத்தி வருகிறது.
தைவான் சீனாவின் ஒரு பகுதி என்றும் அது அடிக்கடி வலியுறுத்தி வருகிறது.

