கோலாலம்பூர்: மலேசிய பொதுத் தேர்தல் நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்யும்படி அரசுத் தரப்பு வழக்கறிஞர் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப், தேர்தல் ஆணையம் மற்றும் மலேசிய அரசாங்கம் ஆகியவற்றை வழக்கறிஞரும் முன்னாள் நீதிபதியுமான சுல்கிஃப்லி அஹமட் மஹினுடின் பிரதிநிதிக்கிறார்.
மூன்று முறை கிள்ளான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள சார்ல்ஸ் சான்டியாகோ, முறைப்படி நாடாளுமன்றம் கலைக்கப்படாததால் தேர்தலை நடத்த அனுமதிக்கக் கூடாது என்று வழக்குத் தொடுத்துள்ளார்.
ஜனநாயக செயல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான அவர், தேர்தலை தேர்தல் ஆணையம் ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
திரு இஸ்மாயிலுக்கு அமைச்சரவை உறுப்பினர்களின் கருத்திணக்கம் இல்லை.
இதனால் அவர் நாடாளுமன்றத்தைக் கலைத்தது அரசியல் அமைப்புக்கு முரணானது என்று சார்ல்ஸ் சான்டியகோ கூறியுள்ளார். நவம்பரில் வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் வெள்ளத்தில் கிள்ளான் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இதில் 54 பேர் உயிரிழந்தனர்.
ஆனால் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உண்டு என்றும் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அரசுத் தரப்பு கேட்டுக்கொண்டது.

