அடுத்த மாதம் முதல், டிக்டாக் செயலியில் நேரலை வசதியை பயன்படுத்த (லைவ் ஸ்ட்ரிமிங்) குறைந்த பட்ச வயது வரம்பு 16இல் இருந்து 18 ஆக அந்த நிறுவனம் உயர்த்துகிறது. சிரியாவைச் சேர்ந்த அகதிகள் முகாம்களில் நூற்றுக்கணக்கான கணக்குகளிலிருந்து, நேரலை மூலம் குழந்தைகள் யாசகம் கேட்பதை பிபிசி செய்தி நிறுவனம் கண்டறிந்தது. எதிர்காலத்தில், பெரியவர்கள் மட்டுமே "மெய்நிகர் நுட்பம் மூலம் பரிசுகளை அனுப்ப முடியும் அல்லது பணமாக மாற்றக்கூடிய அம்சங்களை பயன்படுத்த முடியும்," என்று டிக்டாக் தெரிவித்துள்ளது.
இனி வரும் வாரங்களில், 18 வயதை தாண்டியவர்கள் மட்டுமே நேரலை வசதியைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், இந்த வயதுக் கட்டுப்பாடுகளை டிக்டாக் எவ்வாறு செயல்படுத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இன்ஸ்டாகிராமுக்கும், ஃபேஸ்புக்கிற்கும் தாய் நிறுவனமாக இருக்கும் மெட்டா மற்றும் யூடியூபின் தாய் நிறுவனமான கூகுள் ஆகியவை நேரலை வசதியை பயன்படுத்த குறைந்தபட்ச வயதாக 13 ஆக நிர்ணயித்திருக்கின்றன. இந்த தளங்களில் பயனர்கள் தாங்கள் பதிவேற்றும் உள்ளடக்கத்தை வயது வரம்புக்கு ஏற்ப பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றனர்.

