கொழும்பு: இந்தியாவிலிருந்து இலங்கைக்குத் தங்கம் கடத்துவது அதிகரித்துள்ளது என்று இலங்கை சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் இந்தியர்களும் இலங்கையர்களும் சம்பந்தப்பட்ட எட்டுத் தங்கக் கடத்தல் முயற்சிகள் இடம்பெற்றதாக இலங்கைச் சுங்கத்துறையின் பேச்சாளர் சுதாத்த சில்வா கூறினார்.
இந்தியத் தங்கக் கடத்தல்காரர்களில் சிலர், இலங்கை வழியாக மற்ற நாடுகளுக்கு அதனைக் கடத்த முயல்கின்றனர் என்று திரு சில்வா கூறினார்.
தங்கத்தின் விலையும் அதற்கான தேவையும் அதிகரித்து வருவதே இதற்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, தங்கக் கடத்தலைத் தடுக்கும் வகையில் இலங்கைச் சுங்கத்துறை ஒழுங்கு நடைமுறைகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.
கடத்தல்காரர்களில் சிலர், இலங்கைக்குள் தங்கத்தைக் கடத்தி வந்தபின் அதனை உருக்கி, தங்க பிஸ்கட்டுகளாக மாற்றிவிடுவதாக காவல்துறை துணைக் கண்காணிப்பாளரும் ஊடகத் தொடர்பாளருமான நிகால் தல்டுவா கூறினார்.

