செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
f49447fc-78c8-4d1d-aca1-ed303f6dbf50
-

பொதுமக்களிடமிருந்து தப்பிக்க காவலர்களிடம் உதவிகேட்ட திருடன்

டாக்கா: திருடியதைப் பொதுமக்கள் பார்த்துவிட்டதால் அவர்களிடம் சிக்கி அடி உதை வாங்காமல் தப்பிப்பதற்காக காவல்துறையிடமே திருடன் உதவிகோரிய சம்பவம் பங்ளாதேஷின் பரிசால் நகரில் நிகழ்ந்துள்ளது. கடந்த புதன்கிழமை அதிகாலையில் அங்குள்ள ஒரு மளிகைக் கடையின் பூட்டை உடைத்து, உள்ளே புகுந்த யாசின் கான், 40, அங்கிருந்த பொருள்களை அள்ளி ஒரு மூட்டையில் கட்டினான். வெளியே கிளம்ப முயன்றபோதுதான் நன்றாக விடிந்து, சந்தையில் ஆள்நடமாட்டம் தொடங்கிவிட்டதை அவன் கண்டான். பூட்டிய கடைக்குள் யாசின் இருப்பதைக் கண்டு மக்கள் கூடத் தொடங்கினர். இதனால் அஞ்சிய யாசின், கைப்பேசிமூலம் நடந்ததைக் கூறி காவல்துறையிடம் உதவி கேட்டான். விரைந்துவந்த காவல்துறையினர் அவனைக் கைதுசெய்து, சிறையில் அடைத்ததால் பொது மக்களிடமிருந்து அடிவாங்காமல் தப்பினான்.

இம்ரான் கான் தகுதிநீக்கம்

இஸ்லாமாபாத்: ஊழல் நடவடிக்கைகளில் குற்றவாளி என்பது உறுதிசெய்யப்பட்டதால், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டின் தேர்தல் ஆணையத்தால் எம்.பி. பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். ஆயினும், அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி அதனை ஏற்க மறுத்துவிட்டது. வெளிநாட்டுப் பேராளர்கள் அளித்த பரிசுகளை அரசாங்கப் பரிசுக் காப்பகத்தில் இருந்து இம்ரான் பெற்றார் என்றும் ஆனால் தேர்தல் ஆணையத்திடம் அளித்த உறுதிமொழிப் படிவத்தில் அவற்றைப் பற்றி அவர் குறிப்பிடவில்லை என்றும் கடந்த ஆகஸ்ட்டில் அவர்மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

இலங்கையில் பணவீக்கம் புதிய உச்சம்

கொழும்பு: பொருளியல் நெருக்கடியில் மீண்டுவர முயலும் வேளையில், இலங்கையில் கடந்த செப்டம்பரில் பயனீட்டாளர் விலைக்குறியீடு புதிய உச்சமாக 73.7 விழுக்காட்டைத் தொட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் 84.6 விழுக்காடாக இருந்த வருடாந்திர உணவுவிலைப் பணவீக்கம் செப்டம்பரில் 85.8 விழுக்காடாக உயர்ந்தது. உணவுப்பொருள் சாராப் பணவீக்கம் 62.8 விழுக்காடாக அதிகரித்தது. இந்நிலையில், இம்மாதத்தில் பொருள்களின் விலை குறையக்கூடும் என்று இலங்கை மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்திருக்கிறார்.

சீனர்கள் எழுவர்மீது குற்றச்சாட்டு

நியூயார்க்: அமெரிக்கவாசி ஒருவரைச் சட்டவிரோதமாகச் சீனாவிற்கு நாடுகடத்தும் முயற்சியில் பங்கெடுத்ததாகக் கூறி, சீன நாட்டவர் எழுவர்மீது அமெரிக்காவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 'ஆபரேஷன் ஃபாக்ஸ் ஹன்ட்' எனும் ரகசிய முயற்சியின்மூலம் அமெரிக்காவில் வசிக்கும் சீனர்களைக் கட்டாயப்படுத்தி சீனா திரும்பச் செய்யும் நோக்கில் சட்டவிரோதக் குழுக்கள் செயல்பட்டு வருவதாக அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டனர்.