பெட்டாலிங் ஜெயா: வரும் மலேசியப் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகள் ஆரோக்கியமான வேட்பாளர்களைக் களமிறக்கும் எண்ணம் கொண்டிருக்கலாம். அந்நாட்டின் வருங்கால அரசியல் தலைவர்கள் தங்கள் தவணைக்காலம் நிறைவடையும்வரை பதவியில் இருப்பதை உறுதிசெய்ய இது முக்கியம் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
மலேசியாவின் சென்ற பொதுத் தேர்தல் 2018ஆம் ஆண்டு நடைபெற்றது. அதிலிருந்து நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் சுகாதாரம் சார்ந்த காரணங்களால் மாண்டனர்.
2018ஆம் ஆண்டில் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள செரி செட்டியா, சுங்கை காண்டிஸ் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அத்தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தது அதற்குக் காரணம்.
2019ஆம் ஆண்டில் அதே மாநிலத்தின் செமென்யி தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதன் சட்டமன்ற உறுப்பினர் இருதய வலி ஏற்பட்டு உயிரிழந்ததைத் தொடர்ந்து இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
அதே ஆண்டில் சாண்டாக்கான், தஞ்சுங் பியாய் ஆகிய தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்தெடுப்பதற்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. முன்னைய நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் மாரடைப்பால் மாண்டார், மற்றொருவர் இதய வலிக்குப் பலியானார்.
2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பத்து சாப்பி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த லியூ வூய் கியோங், நியூமோனியா காய்க்கலுக்கு ஆளாகி மாண்டார். சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு கெரிக் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஹஸ்புல்லா ஒஸ்மானும் இதய வலிக்கு ஆளாகி உயிரிழந்தார்.
எனினும், கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலால் அவ்விரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தப்படவில்லை.
தேர்தலில் போட்டியிட தற்போதைக்கு சுகாதார அம்சங்கள் கருத்தில்கொள்ளப்படுவதில்லை என்று அரசியல் விமர்சகர் துங்கு மோஹார் முகம்மது மொக்தார் கூறினார். எனினும், வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும்போது அரசியல் கட்சிகள் இதைக் கருத்தில்கொள்ளவேண்டும் என்பதை அவர் சுட்டினார்.
பிரச்சினையைக் கையாள அரசியல் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அடிப்படை சுகாதாரப் பரிசோதனையை மேற்கொள்ள வைக்கலாம் என்று மூத்த விரிவுரையாளரான அஸ்மில் முகம்மது டாயிப் பரிந்துரைத்தார். வேட்பாளர்களின் உடல்நலனைக் கணிப்பது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பல்ல என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

