பெய்ஜிங்: சீனாவில் தற்போது ஆக உயரிய பதவியில் இருக்கும் ஏழு தலைவர்களில் நால்வர் ஓய்வுபெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களில் சீனப் பிரதமர் லீ கெச்சியாங்கும், தலைவர்களில் நான்காம் நிலையில் இருக்கும் வாங் யாங்கும் அடங்குவர்.
எதிர்பாரா வகையில் இடம்பெற்ற நாடாளுமன்ற மாற்றங்களால் இந்நிலை உருவாகும் என்று கூறப்படுகிறது. அதனால் அதிபர் ஸி ஜின்பிங்கின் நிலை மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திரு ஸி, தம்முடன் இணைந்து பணியாற்ற கூட்டாளிகளைத் தேர்ந்தெடுக்கொள்ள முடியும்.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்தியக் குழுவில் திரு லீ, திரு வாங் ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை. புதிய மத்தியக் குழுவில் இடம்பெறும் உறுப்பினர்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் உயரிய பிரவு, சீன ராணுவம் உள்ளிட்டவற்றைச் சேர்ந்தவர்கள்.
திரு வாங், தற்போது திரு ஸிக்கு அடுத்தபடியாக இரண்டாம் நிலையில் இருக்கும் திரு லீ இருவரும் ஓய்வுபெறுவதற்கான வயதை இன்னும் தொடவில்லை. இருவருக்கும் 67 வயது.
மூன்றாம் நிலையில் இருக்கும் 72 வயது லீ ஷான்ஷூ, ஏழாம் நிலையில் உள்ள 69 வயது ஹான் ஷெங் ஆகியோரும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்தியக் குழுவில் இடம்பெறவில்லை. எனினும், அவ்விருவரும் பதவி விலகுவர் என்று எதிர்பார்க்கப்பட்டது.
திரு லீயின் பிரதமர் பதவி, திரு வாங்கிடம் ஒப்படைக்கப்படலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. அதிகாரத்துவத்தை வைத்துப் பார்க்கும்போது அப்பதவி அடுத்து அவருக்குத்தான் போகும் என்று கூறப்பட்டது.

