செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
ef755719-bc2c-4f4d-8f32-666a7b5a6cc5
-

ஆஸ்திரேலியாவில் தரவுக்கசிவைக் கையாள நடவடிக்கை

சிட்னி: ஆஸ்திரேலியாவில் தனிப்பட்ட தகவல்கள் ஊடுருவப்பட்டால் அதற்கான தண்டனைகளை அந்நாட்டு அரசாங்கம் கடுமையாக்கவுள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனமான 'ஆப்டஸ்' தரவுக்கசிவுக்கு உள்ளானதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மோசமான தரவுக்கசிவு இடம்பெற்றாலோ ஒருமுறைக்கு மேல் தரவுக்கசிவு நிகழ்ந்தாலோ பாதிக்கப்பட்ட நிறுவனத்துக்கான அதிகபட்ச அபராதத் தொகை 50 மில்லியன் ஆஸ்திரேலிய டாலருக்கு (45 மில்லியன் வெள்ளி) உயர்த்தப்படும். தற்போதைய அதிகபட்ச அபராதத் தொகை 2.22 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்.

இதற்கு வழிவகுக்கும் சட்டங்கள் இம்மாதம் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசமான சிறுநீரகப் பிரச்சினைக்கு சிங்கப்பூரிலிருந்து மருந்து

ஜகார்த்தா: மோசமான சிறுநீரகப் பிரச்சினைக்கு ஆளான சிறுவர்கள் இறப்பதைத் தவிர்க்கக் கூடுதலான நச்சுக் கலப்பைச் சமாளிப்பதற்கான 'ஆன்ட்டிடோட்' மருந்தை இந்தோனீசியா சிங்கப்பூரிடமிருந்து வாங்கவுள்ளது. இந்தோனீசியாவின் சுகாதார அமைச்சர் புடி குனாடி சாடிக்கின் நேற்று முன்தினம் இதைத் தெரிவித்தார்.

நேற்று முன்தின நிலவரப்படி அந்நாட்டில் மோசமான சிறுநீரகப் பிரச்சினைக்கு ஆளாகி மாண்ட சிறுவர்களின் எண்ணிக்கை 133க்கு அதிகரித்ததாக இந்தோனீசிய சுகாதார அமைச்சு கூறியது. பெரும்பாலான நோயாளிகள் ஐந்து வயது அல்லது அதற்குக்கீழ் உள்ளவர்கள்.

இலங்கை அதிபரின் உரிமையைக் குறைக்கும் மசோதா அமலாக்கம்

கொழும்பு: இலங்கையில் அதிபரின் உரிமைகளைக் குறைக்க வகைசெய்யும் மசோதாவிற்கு சாதகமாக அந்நாட்டு நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது. மக்களின் கோபத்தைத் தணிக்கும் முயற்சியாக இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மசோதாவிற்கு சாதகமாக இலங்கை நாடாளுமன்றம் நேற்று முன்தினம் வாக்களித்தது. அதிபரின் உரிமைகளைக் குறைத்து அவரைக் கூடுமானவரை சட்டத்திற்கு இணங்க நடந்துகொள்ள வைக்கும் முயற்சியாக இந்நடவடிக்கை கருதப்படுகிறது.

மக்களிடையே பெரும் அதிருப்தி நிலவியதால் இலங்கையின் முன்னைய அதிபர் கோத்தபாய ராஜபக்ச பதவி விலக நேரிட்டது. சுதந்திரம் அடைந்த பிறகு இலங்கை ஆக மோசமான பொருளியல் நெருக்கடியை எதிர்கொண்டதைத் தொடர்ந்து மக்களிடையே கோபம் எழுந்ததால் இந்நிலை உருவானது.

தவறான அரசியல் விளம்பரங்களைத் தடுக்காத டிக்டாக்

நியூயார்க்: தேர்தல்கள் தொடர்பில் தவறான கருத்துகளைக் கொண்ட 90 விழுக்காடு அரசியல் விளம்பரங்களை டிக்டாக் சமூக ஊடகம் அடையாளம் காணத் தவறியுள்ளது. அதே வேளையில், யூடியூப், ஃபேஸ்புக் ஆகிய இரண்டும் அத்தகைய விளம்பரங்களில் பெரும்பாலானவற்றை அடையாளம் கண்டு அவற்றை வெளிவராமல் தடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

தவறான கருத்துகளின் தொடர்பில் ஆய்வு மேற்கொள்வோர் நடத்திய சோதனையில் இந்த விவரங்கள் தெரியவந்தன. கண்காணிப்பு அமைப்பான 'குளோபல் விட்னஸ்', நியூயார்க் பல்கலைக்கழகத்தின் பொறியியல் கழகம் ஒன்றில் இருக்கும் இணையப் பாதுகாப்புப் பிரிவும் நடத்திய சோதனையின் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. போலிக் கணக்ககுளைக் கொண்டு ஆங்கிலத்தில் 10 விளம்பரங்களும் ஸ்பானிய மொழியில் 10 விளம்பரங்களும் சம்பந்தப்பட்ட சமூக ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.