ஜெனீவா: கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த மாபெரும் அளவில் முயற்சிகள் எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து உலகளவில் ஆக அதிக மரணங்களை விளைவிக்கக்கூடிய தொற்றுநோயாகக் காசநோய் மீண்டும் உருவெடுத்துள்ளதாக வல்லுநர் ஒருவர் கூறியுள்ளார்.
கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலை நன்கு கையாள எடுக்கப்பட்ட முயற்சிகளை லாபநோக்கமற்ற காசநோய் கூட்டமைப்பான 'டிபி அலயன்ஸ்'ஸின் தலைவர் மெல் ஸ்பிகல்மன் பாராட்டினார். எனினும், காசநோயைப் பொருத்தவரை நிலைமை மோசமாக இருப்பதை நேர்காணல் ஒன்றில் டாக்டர் ஸ்பிகல்மன் சுட்டினார்.
கொவிட்-19 கிருமிப் பரவல் தலைதூக்குவதற்கு முன்பு காசநோய்தான் உலகில் ஆக அதிகமானோரைப் பலிவாங்கும் தொற்றுநோயாக இருந்தது. ஆண்டுதோறும் அதற்கு ஆளானோரில் சுமார் 1.5 மில்லியன் பேர் உயிரிழந்தனர்.
இப்போது உலகளவில் கொவிட்-19 மரணங்கள் தொடர்ந்து குறைந்துவரும் வேளையில் ஆக அதிகமானோரைப் பலிவாங்கும் தொற்று நோயாகக் காசநோய் மீண்டும் உருவெடுத்துள்ளதை டாக்டர் ஸ்பிகல்மன் சுட்டினார்.
குறிப்பாக வறுமை அதிகம் உள்ள நாடுகளுக்குக் காசநோய்க்கான மலிவான, வேகமாகப் பலனளிக்கும் மருந்துகளைக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள 'டிபி அலயன்ஸ்', அந்நோயால் தினமும் சராசரியாக 4,109 பேர் இறப்பதாகத் தெரிவித்தது. மாறாக, ஜான் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தன் புள்ளிவிவரங்களின்படி கடந்த நான்கு வாரங்களில் தினமும் சராசரியாக சுமார் 1,449 கொவிட்-19 மரணங்கள் பதிவாயின.
எனினும், கொவிட்19 தொடர்பில் இருக்கும் அக்கறை காசநோய்க்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலின்போது காசநோய்க்கு எதிரான போராட்டத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டதாக டாக்டர் ஸ்பிகல்மன் சொன்னார்.
கொவிட்-19 போராட்டத்துக்குப் பயன்படுத்தப்பட்ட அதே வளங்கள் இருந்தால் காசநோயை முழுமையாக அழிக்கமுடியும் என்று டாக்டர் ஸ்பிகல்மன் குறிப்பிட்டார்.

