பெர்லின்: ஈரானில் தொடரும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜெர்மனியின் தலைநகர் பெர்லினிலும் பல்லாயிரக்கணக்கானோர் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் சுமார் 80,000 பேர் இந்நகரில் பேரணியில் கலந்துகொண்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
"பெண்கள், வாழ்க்கை, சுதந்திரம்" என்ற வார்த்தைகளைக் கொண்ட பதாகைகளையும் ஈரான் கொடிகளையும் ஏந்தியபடி பலர் பேரணியில் கலந்துகொண்டனர்.
ஈரானில் 22 வயது குர்தியப் பெண்ணான மாஹ்சா அமினி அந்நாட்டின் நன்னடத்தைக் காவல்துறையின் தடுப்புக் காவலில் இருந்தபோது மாண்டார். அதைத் தொடர்ந்து ஆறாவது வாரமாக அங்கு ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன.
சரியான முறையில் ஆடை அணியாததால் அமினி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதையடுத்து ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.
இதற்கிடையே, ஈரானில் ஆர்ப்பாட்டங்கள் இறுதி நாள்களை நெருங்கியுள்ளதாக அந்நாட்டின் துணை உள்துறை அமைச்சர் மஜித் மிராஹ்மாடி நேற்று முன்தினம் கூறினார்.
ஈரானில் ஆர்ப்பாட்டங்களில் பலர் உயிரிழந்துவிட்டனர். மாண்டோரில் பெரும்பாலோர் ஆர்ப்பாட்டக்காரர்கள், சிலர் பாதுகாப்புப் படையினர்.

