லண்டன்: பிரிட்டனின் அடுத்த பிரதமராகத் தாம் போட்டியிடப்போவதாக திரு ரிஷி சுனக் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளார். 100க்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அவருக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பிரிட்டனின் பிரதமராவதற்குப் போதுமான ஆதரவு திரட்ட திரு போரிஸ் ஜான்சன் சிரமப்படுவதாக முன்னதாகத் தகவல் வெளியானது. திரு சுனக்கிற்கு ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் முக்கிய வலது சாரி உறுப்பினர்கள் ஆதரவாக நிற்பதால் இந்நிலை உருவானது.
திரு ஜான்சனும் திரு சுனக்கும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது. கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பொறுப்பை வகிப்பது குறித்த கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவைக்குமாறு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரையும் கேட்டுக்கொண்டிருந்தனர். ஒருவர் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளவும் மற்றொருவர் அமைச்சரவையில் மூத்த அமைச்சர் பொறுப்பை வகிப்பதற்கும் வகைசெய்யும் ஒப்புதலுக்கு வருமாறு திரு சுனக்கும் திரு ஜான்சனும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இதற்கிடையே, பிரதமராவதற்கான முயற்சியில் தாம் இன்னமும் ஈடுபட்டுள்ளதாக திருவாட்டி பெனி மொர்டோன்ட் தெரிவித்துள்ளார்.

