ஜெர்மனியிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்படவிருந்த ஆடவர் ஒருவரின் பயணப் பெட்டியில் அரிய வகை முதலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
பெட்டியை ஊடுகதிர்ச் சோதனைக்கு உட்படுத்தியபோது அதில் உயிருள்ள அல்பினோ முதலை ஒன்று பிளாஸ்டிக் பையில் கட்டப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டனர்.
முதலையைக் கடத்த முயன்ற நபர் மியூனிக் நகரிலிருந்து சிங்கப்பூருக்கு விமானப் பயணம் மேற்கொள்ள முயன்றபோது பிடிபட்டார் என்று மியூனிக் சுங்கச்சாவடி துறை தெரிவித்தது. இந்தச் சம்பவம் மியூனிக் நகரில் சென்ற மாதம் 25ஆம் தேதி அன்று நடந்தது.
இச்சம்பவத்தின் தொடர்பில் 42 வயது அமெரிக்க ஆடவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மியூனிக் சுங்கச்சாவடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் எதற்காக முதலையைக் கடத்த முயன்றார் என்பது இன்னமும் தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
முதலைக்கு சிகிச்சை அளிப்பதற்காக அது தற்போது முதலை ஊர்வன சரணாலயம் ஒன்றுக்கு அனுப்பப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டது.
அல்பினோ வகை முதலை $20,000 முதல் இரண்டு மில்லியன் வெள்ளி வரை விற்கப்படலாம் என்று சிங்கப்பூரின் விலங்கு ஆராய்ச்சி மற்றும் கல்வி சங்கத்தின் துணை தலைமை நிர்வாகி அன்பரசி பூபால் குறிப்பிட்டார்.


