டாக்கா: சிட்ராங் எனும் சூறாவளி வீசியதால் பங்ளாதேஷில் குறைந்தது ஒன்பது பேர் மாண்டுவிட்டனர். பல வீடுகள் அழிந்துபோயின, மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டன. சாலை, மின்சார, தொடர்பு இணைப்புகள் பாதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சூறாவளி வீசுவதற்கு முன்பு பலர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அதனால் பலரின் உயிர் காப்பாற்றப்பட்டது. எனினும், தொடர்புகள் சரிசெய்யப்பட்டால்தான் மொத்தம் எத்தனை பேர் உயிரிழந்தனர், சேதத்தின் அளவு ஆகியவற்றைக் கணிக்கமுடியும் என்று அதிகாரிகள் கூறினர்.
வங்கக் கடலிலிருந்து நேற்று காலை சிட்ராங் சூறாவளி வீசியது. காற்றின் வேகம் மணிக்கு 88 கிலோமீட்டர் வரை இருந்தது. தாழ்வான பகுதிகளில் சுமார் மூன்று மீட்டர் உயரத்திற்கு வெள்ளம் ஏற்பட்டது.
பல பகுதிகளில் தொலைபேசி, மின்சாரத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. கடற்கரைப் பகுதிகளில் இருள் சூழ்ந்தது.
மாண்டோரில் பெரும்பாலோர் மரம் கவிழ்ந்து சிக்கிக்கொண்டதில் உயிரிழந்தனர்.
தென்கிழக்கு பங்ளாதேஷில் உள்ள அகதிகள் முகாம்களில் அதிக சேதம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரொஹிங்யா அகதிகள் அங்கு வலுவற்ற கூடாரங்களில் வாழ்கின்றனர்.
சுமார் 33,000 ரொஹிங்யா அகதிகள், முகாம்களிலிருந்து வங்கக் கடலில் இருக்கும் வெள்ளம் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ள தீவு ஒன்றுக்கு இடம் மாறினர். உள்ளரங்குகளிலேயே இருக்குமாறு அதிகாரிகள் அவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவில் கடும் மழை பொழிந்தது. அங்கு சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது.
சிட்ராங் சூறாவளி இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தையும் பாதித்தது.

