இந்தோனீசியப் படகில் தீ,
13 பேர் உயிரிழப்பு
மெளமெர் (இந்தோனீசியா): இந்தோனீசியாவில் நூற்றுக்கணக்கானோரை ஏற்றிச் சென்ற படகு தீப்பிடித்துக்கொண்டதால் (படம்) குறைந்தது 13 பேர் மாண்டதாக போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு நுசா தெங்காரா மாநிலத்தில் உள்ள திமோர் தீவின் கடற்கரைக்கு அருகே இச்சம்பவம் நேற்று முன்தினம் நிகழ்ந்தது. 'கேஎம் எக்ஸ்பிரஸ் கன்டிகா 77' எனும் படகு பெரிய அளவில் தீப்பிடித்துக்கொண்டது. உயிர் தப்ப முயன்ற பயணிகள் படகிலிருந்து குதிக்க நேரிட்டது.
படகில் மொத்தம் 254 பேர் இருந்தனர். அவர்களில் பயணிகளும் ஊழியர்களும் அடங்குவர்.
241 பேர் மீட்கப்பட்டதாக கிழக்கு நுசா போக்குவரத்து அமைப்பின் தலைவர் இஸ்யாக் நுக்கா தெரிவித்தார். 13 பேர் மாண்டதாக அவர் குறிப்பிட்டார். தீ மூண்டதற்கான காரணத்தை அவர் வெளியிடவில்லை.
எனினும், படகில் மொத்தம் 240 பேர் இருந்ததாகவும் 14 பேர் மாண்டதாகவும் தேடல், மீட்பு அமைப்பு ஒன்று தெரிவித்தது. அதன்படி 226 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக அந்த அமைப்பு கூறியது.
மியன்மார் இசை நிகழ்ச்சியில் ஆகாயத் தாக்குதல், 50 பேர் பலி
காச்சின் (மியன்மார்): மியன்மாரில் சிறுபான்மை இனத்தவர் நடத்திய இசை நிகழ்ச்சி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆகாயப் படைத் தாக்குதலில் குறைந்தது 50 பேர் மாண்டனர். மியன்மாரில் சிறுபான்மை இனத்தவருக்கும் ராணுவ அரசாங்கத்துக்கும் இடையே பூசல் இருந்துவருவதையொட்டி இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அந்நாட்டின் எதிர்த்தரப்புக் குழுக்களும் ஊடகங்களும் நேற்று தெரிவித்தன.
ஐக்கிய நாட்டு நிறுவனமும் மேற்கத்திய நாடுகளின் தூதரகங்களும் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று வட மியன்மாரில் உள்ள காச்சின் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் பொதுமக்கள் மாண்டதாக உள்ளூர் பாடகர்களும் 'கேஐஏ' எனப்படும் காச்சின் சுதந்திர ராணுவமும் குறிப்பிட்டன. மூன்று விமானங்கள் தாக்குதலை மேற்கொண்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் சொன்னதாகத் தெரிவிக்கப்பட்டது.

