கிட்டத்தட்ட 20 ஆண்டுகளில் முதன்முறையாக இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் முடிக்கும் இலக்கைக் கொண்டுள்ளது நியூகாசல் யுனைடெட். அதற்கான நம்பிக்கை குழுவிடம் அதிகரித்து வருகிறது.
டோட்டன்ஹம் ஹாட்ஸ்பரை வென்று அசத்திய நியூகாசலிடம் பண பலமும் இருக்கிறது, திறமையான விளையாட்டாளர்களும் உள்ளனர், குழுவின் விளையாட்டும் விறுவிறுப்பாக உள்ளது. தங்களை அசைக்கமுடியாது என்ற கருத்து இருக்கக்கூடிய பெரிய குழுக்கள் கவனமாக இருக்கவேண்டும்.
தொடர் சரிவைச் சந்தித்து வரும் ஸ்பர்ஸ், பட்டியலில் இன்னமும் மூன்றாவது இடத்தில் உள்ளது. இது நிலைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சவுத்ஹேம்ப்டனை வெல்லத் தவறிய ஆர்சனல் வீரர்களிடம் இதுவரை விட்டுக்கொடுக்காமல் விளையாடி எதிர்பார்ப்புகளை முறியடித்த களைப்பு தென்படத் தொடங்கியுள்ளது. இது தொடராமல் நிர்வாகி மிக்கெல் அர்ட்டெட்டா பார்த்துக்கொள்ளவேண்டும்.
பட்டியலில் முதலிடத்தில் உள்ளது ஆர்சனல்.
'இனி பழைய தோல்விப் பாதைக்குத் திரும்பும் எண்ணம் எங்களுக்கு இல்லை' என்ற வீம்பு மான்செஸ்டர் யுனைடெட்டிடம் தெரிகிறது. செல்சிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி இரு நிமிடங்களில் தோல்வியின் விளிம்பிலிருந்து தன்னை மீட்டுக்கொண்டது.
எனினும், யுனைடெட் கோல் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள சிரமப்படுகிறது. மேலும், சொந்த மண்ணில் பெரிய குழுக்களை நன்கு கையாண்டு வெல்கிறது. ஆனால் பெரிய குழுக்களின் திடலில் அதைச் செய்யத் தவறுகிறது.
இந்தப் போக்கு யுனைடெட்டிற்கு நல்லதில்லை.
நிர்வாகி கிரஹாம் போட்டரின் தலைமையில் எப்படிப்பட்ட சூழலிலும் மீண்டுவரக்கூடிய ஆற்றலை வெளிப்படுத்துகிறது செல்சி. காரணம், தேவைப்படும்போதெல்லாம் போட்டர் சரியான மாற்றங்களைச் செய்து வந்துள்ளார், ஒரே ஆட்டத்தில் பலமுறை உத்திகளையும் மாற்றுவார்.
எனினும், அடிக்கடி மாற்றங்கள் செய்தால் குழுவில் நிலைத்தன்மை இல்லாமல் போகக்கூடும்.
லீக் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளது செல்சி. ஆறாம் இடத்தை வகிக்கிறது யுனைடெட்.
தொடர்ந்து சிறப்பாக விளையாட முடியாமல் திணறுகிறது லிவர்பூல். மான்செஸ்டர் சிட்டியை வென்றுவிட்டு மறுவாரமே பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் நாட்டிங்கம் ஃபாரஸ்ட்டிடம் தோல்வியுற்றது அதற்கு எடுத்துக்காட்டு.
நிர்வாகி யர்கன் கிளோப் இப்பிரச்சினையை சரிசெய்யாவிட்டால் லிவர்பூல் லீக்கில் பெரிதும் பின்தங்கிப்போகலாம். தற்போது பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது லிவர்பூல்.
சுமாராக விளையாடினாலும் வெற்றி பெறுவதற்குப் போதுமானவற்றைச் செய்யும் சூத்திரத்தைத் தெரிந்து வைத்துள்ளது பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள மான்செஸ்டர் சிட்டி.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பிரைட்டன் சிறப்பாக விளையாடியது. ஆனால் அக்குழுவால் சிட்டியைத் தடுக்கமுடியவில்லை.
இந்த பிரிமியர் லீக் பருவம் இதுவரை ஏதோ ஒரு வகையில் எதிர்பாரா முடிவுகளைத் தந்துள்ளது. ஸ்பர்ஸ், லிவர்பூல் போன்ற குழுக்கள் பலவீனமாகத் தென்படுகின்றன. ஆர்சனல், நியூகாசல் ஆகியவை எதிர்பார்பார்ப்புகளை மிஞ்சியுள்ளன.
இந்தப் போக்கு தொடரும் என்று உறுதியாகச் சொல்லமுடியாது. ஆனால் அதற்கான வாய்ப்புகள் இந்த லீக் பருவத்தில் அதிகம் இருக்கும் உணர்வு நிலவுகிறது.
பிரசன்னா கிருஷ்ணன்

