செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
c2c1d214-8464-4ec9-bd5f-ebc65d471b5c
-

பேராக் குகையில் சிக்கிக்கொண்ட

30 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்

ஈப்போ: மலேசியாவின் பேராக் மாநிலத்தில் உள்ள குகை ஒன்றில் சிக்கிக்கொண்ட 30 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அப்பகுதியில் கனமழை பெய்ததைத் தொடர்ந்து, வெள்ளநீரால் குகையின் வெளிவாயில் தடைபட்டது.

குவா தெம்புருங் எனும் இந்தக் குகையைச் சுற்றியுள்ள பகுதியில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் நீர்மட்டம் உயரத் தொடங்கியதாக கம்பார் மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்பிரின்டென்டண்ட் முகம்மது நஸ்ரி தாவூட் கூறினார்.

இந்தக் குகை உள்ளூர் சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.

"குகையில் சிக்கிக்கொண்டவர்கள் படக்குழுவினராவர். அவர்கள் அங்கு படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருந்தனர். இச்சம்பவம் குறித்து தீயணைப்பு, மீட்புத் துறைக்குத் தெரியப்படுத்தப்பட்டது," என்றார் அவர்.

மீட்புப் பணியில் உதவ காவல்துறைக் குழுவினர் நிகழ்விடத்திற்கு விரைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

போதைப்பொருள் சோதனையில்

200 சுற்றுப்பயணிகள் தடுத்துவைப்பு

பேங்காக்: தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் உள்ள 'கரோவோக்கே' மதுபானக்கூடத்தில் காவல்துறையினர் நடத்திய போதைப்பொருள் சோதனையில் 200க்கும் அதிகமான சுற்றுப்பயணிகள் தடுத்துவைக்கப்பட்டனர்.

இதில் சம்பந்தப்பட்ட பெரும்பாலானோர் சீன நாட்டவர் என்றும் அரச தாய்லாந்து காவல்துறை பேச்சாளர் கூறினார்.

"காவல்துறை சிறுநீர் சோதனையை நடத்தியது. இதில் அவர்கள் சட்டவிரோத பொருள்களைப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது," என்றார் அவர்.

சுற்றுப்பயணிகள் எந்த மாதிரியான போதைப்பொருளை உட்கொண்டனர் என்பதைக் கண்டறிய கூடுதல் பரிசோதனைகள் நடத்தப்படும் என்றும் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடுப்பதா என்பது பற்றி அதன் பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் அப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

வூஹானின் ஒரு பகுதி முடக்கம்

பெய்ஜிங்: கொவிட்-19 பாதிப்புகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து சீனாவின் வூஹான் நகர், அதன் மத்தியப் பகுதி ஒன்றை முடக்கியது. நேற்று புதன்கிழமையிலிருந்து சுமார் 900,000 குடியிருப்பாளர்கள் வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.