பாலி: தென்கிழக்கு ஆசியாவில் ஆகப்பெரிய பொருளியல் சக்தியாக விளங்கும் இந்தோனீசியா, உலகப் பணக்காரர்களை ஈர்க்கும் போட்டியில் இறங்கியிருக்கிறது.
அதற்கு பாலித் தீவை அது துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துகிறது.
இந்தோனீசியாவில் உள்ள ஏதாவது ஒரு வங்கியில் குறைந்தது இரண்டு பில்லியன் ருப்யா (S$180,800) முதலீடு செய்யும் தகுதிபெறும் சுற்றுப்பயணிகள் பாலியை இரண்டாவது வீடாகக் கருதி ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை தங்கலாம் என்று இந்தோனீசியா அறிவித்து உள்ளது.
இந்தப் புதிய '2வது வீடு' விசா கிறிஸ்மஸ் நாள் அல்லது புதிய விதிமுறை வெளியிடப்பட்ட அறுபது நாள்களுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும்.
"இந்தோனீசிய பொருளியலில் குறிப்பிட்ட வெளிநாட்டவர்கள் ஆக்ககரமான முறையில் பங்களிப்பதை இந்தத் திட்டம் ஊக்குவிக்கிறது," என்று உல்லாசத் தீவான பாலியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய குடிநுழைவுத் துறை இயக்குநர் விடோடோ எகாட்ஜஹஜானா தெரிவித்தார்.
தொழில்துறை நிபுணர்கள், ஓய்வுபெற்றவர்கள், வசதி படைத்தவர்கள் ஆகியோரை ஈர்க்க கோஸ்டாரிக்கா முதல் மெக்சிகோ வரையிலான பல நாடுகள் நீண்டகால விசாவை அறிவித்து வருகின்றன. அந்தப் பட்டியலில் இந்தோனீசியாவும் சேர்ந்துள்ளது.
கொவிட்-19 நோய்த் தொற்றுக்குப் பிறகு எந்த இடத்திலிருந்தும் பணியாற்ற முடியும் எனும் போக்கு அதிகரித்து வருகிறது.
இதில் நன்கு படித்த உயர் தொழில்நுட்ப நிபுணர்கள் தாங்கள் விரும்பிய இடத்திலிருந்து சுதந்திரமாக பணியாற்றுவதற்காக பல நாடுகளில் குடியேறி வருகின்றனர்.
இந்த வாய்ப்பை இந்தோனீசியா உள்ளிட்ட நாடுகள் தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்ள விரும்புகின்றன.
கடந்த 2021ல் மின்னிலக்க இடம்பெயருவோருக்கான விசாவை இந்தோனீசியா அறிவித்து இருந்தது.
நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கும் பாலித் தீவுக்கு விடுமுறையைக் கழிக்க விரும்பும் அனைத்துலகப் பயணிகளை ஈர்ப்பதே இதன் நோக்கமாகும்.
இதன்மூலம் அந்நிய செலாவணியைப் பெருக்க முடியும் என நாடுகள் நம்புகின்றன.
இந்தோனீசியாவுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ள வேளையில் 'பாலி 2வது வீடு' விசா அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மேலும், அடுத்த மாதம் பாலியில் ஜி20 மாநாடு நடைபெறுவதால் கருடா இந்தோனீசியா உள்ளிட்ட விமான நிறுவனங்கள் மீண்டும் அனைத்துலக சேவைகளை தொடங்கவிருக்கின்றன.
ஜி20 உச்சநிலை மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பேராளர்கள் கலந்துகொள்கின்றனர்.
இதனால் உலகின் பார்வை பாலித் தீவு பக்கம் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

