தெஹ்ரான்: உலகிலேயே 'ஆக அழுக்கான ஆடவர்' என ஊடகங்களால் அழைக்கப்பட்டு வந்தவர் 94 வயதில் காலமானார்.
எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறை குளித்த இவர், சில மாதங்கள் கழித்து மரணம் அடைந்தார்.
அமவ் ஹஜி எனும் இந்த ஈரானியர், அரை நூற்றாண்டிற்கும் மேலாக சவர்க்காரத்தையும் தண்ணீரையும் பயன்படுத்த மறுத்தார். அவற்றைப் பயன்படுத்தினால் தம் உடல்நலம் குன்றும் என இவர் அஞ்சினார்.
ஈரானின் தெற்கு மாநிலமான ஃபார்சில் வசித்து வந்த இவரைக் குளிக்க வைக்க அப்பகுதி மக்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
எனினும், நெருக்குதல் காரணமாக ஒரு சில மாதங்களுக்கு முன்னர் அமவ் ஹஜி குளித்ததாக உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டன.
ஈரானின் ஐஆர்என்ஏ செய்தி நிறுவனத்தின்படி, அமவ் ஹஜியின் உடல்நிலை குன்றியதாகவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர் இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
அமவ் ஹஜிக்கு புகைபிடிக்கும் பழக்கம் இருந்தது. ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சிகரெட்டுகளைக் கொண்டு இவர் புகைபிடித்ததைப் படங்கள் காட்டுகின்றன.
இவரைக் குளிக்க வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டாலோ அருந்த சுத்தமான குடிநீர் வழங்கினாலோ இவர் சோகம் அடைந்துவிடுவார் என்று ஐஆர்என்ஏ செய்தி குறிப்பிட்டது.

